சட்டப்பேரவை தேர்தலில் வாக்காளித்த வாக்காளர்களுக்கு திமுக நாமம் போட்டுவிட்டதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலில் வாக்காளித்த வாக்காளர்களுக்கு திமுக நாமம் போட்டுவிட்டதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு வரும் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 57,778 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இதையடுத்து அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 7 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக, தனது சொந்த மாவட்டமான சேலத்தில், வாழப்பாடி பேரூராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை கடுமையாக விமர்சித்தும், அதிமுக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகள் பற்றியும் பட்டியலிட்டு பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், திமுகவின் 9 மாத ஆட்சி இருண்ட காலம். திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை சம்பவங்களால் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. நீட் தேர்வு ரகசியத்தை வைத்து கொண்டு அதிமுகவை ஏன் கூட்டத்திற்கு அழைக்கிறீர்கள்? கொடுத்த வாக்குறுதி பற்றி கேட்கும் மக்களுக்கு திமுக நாமம் போட்டுவிட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை போலீசாரே மிரட்டுகின்றனர். கீழே இருக்கும் சக்கரம் ஒருநாள் மேலே வரும். அப்போது, ஜனநாயகத்திற்கு புறம்பாக செயல்படும் காவல்துறை அதிகாரிகள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள் என்று தெரிவித்தார்.
