பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் செயல்பாடுகளை கணிப்பதில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தப்பு கணக்குப் போட்டுவிட்டதாக அரசியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

மீண்டும் நிதிஷ் முதல்வர்

கடந்த, 2015ல் லாலு - நிதிஷ் - சோனியா இணைந்து மெகா கூட்டணி உருவாக்கினர். அதன் பலனாக பீகார் சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றனர். ஆனால், லாலு கட்சி ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சியை நடத்த முடியும் என்ற சூழ்நிலை கைதியாக நிதிஷ்குமார் காணப்பட்டார்.

இந்த சூழ்நிலையில்தான் நேற்று முன்தினம் மாலை, 6 மணிக்கு முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, நேற்று காலை 10 மணிக்கு பா.ஜனதா ஆதரவுடன் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராகி விட்டார்.

தப்புக்கணக்கு

தனது மகன் தேஜஸ்வி, துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டார் என கூறிய லாலு, நிதிஷ்குமாரின் அடுத்தகட்ட செயல்பாடுகளை கணிப்பதில் தப்புக்கணக்கு போட்டுவிட்டார் . அந்த வகையில், லாலு செய்த தவறுகள் வருமாறு:-

முதல்வர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்வார் என்று லாலு ஒருகாலும் நினைக்கவில்லை. மெகா கூட்டணியை விட்டு நிதிஷ் போக மாட்டார்; மீறி சென்றால் அவரால் ஆட்சியில் நீடிக்க முடியாது என்பதே லாலுவின் கணிப்பாக இருந்தது.

தேர்தல் வந்தால்...

அதே போல் மீண்டும் தேர்தல் வந்தாலும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தனித்து நின்று வெற்றி பெற முடியாது என்றே லாலு நினைத்தார்.

மதச்சார்பற்ற அணியில் இருந்து நிதிஷ்குமார் விலக முடியாது என்றே லாலு நினைத்தார். பா.ஜ.,விற்கு மாற்றாக மதச்சார்பற்ற அணியில் இருந்தால் தான் தேசிய அளவில் தனக்கு முக்கியத்தும் கிடைக்கும் என நிதிஷ்குமார் நினைத்து வந்தார் என லாலு கருதினார்.

யாதவர், முஸ்லிம்கள்

ஒரு வேளை, நிதிஷ்குமார் ராஜினாமா செய்தால், அவருக்கு யாதவ மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவு கிடைக்காமல் போகும். எனவே, அந்த விபரீத முடிவை அவர் எடுக்க மாட்டார் என லாலு நினைத்தார். மேலும், யாதவர்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் தனக்கே ஆதரவு அளிக்கின்றனர் என்ற எண்ணமும் லாலுவுக்கு உண்டு.

ராஷ்ட்ரீய ஜனதா தள ஆதரவு இல்லாமல் நிதிஷ்குமாரால் ஆட்சியை நடத்த முடியாது என்பது லாலுவின் திட்டவட்டமான எண்ணமாக இருந்தது.

புரிந்து கொள்ளாத மவுனம்

லாலு மகன் தேஜஸ்வி மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகும், தேஜஸ்வி குறித்து நிதிஷ்குமார் எதுவும் கூறாமல் மவுனம் காத்தார். இதை லாலு தவறாக புரிந்து கொண்டார். தன் மகன் விளக்கம் அளித்து விட்டால் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து விடும் என லாலு நம்பினார்.

ஆனால், அனைத்து தவறாக போய் விட்டது. பா.ஜ., உடன் கூட்டணி அமைத்து, மீண்டும் முதல்வராகி விட்டார் நிதிஷ்.