தன் மீதான பாலியல் சுற்றச்சாட்டை நிராகரித்துவிட்டு, என் அனுமதி இல்லாமல் ஆளுநர் என்னைத் தொட்டது மிகவும் தவறானது என்றும் அநாகரீகமானது என்றும் பெண் பத்திரிக்கையாளர் லட்சுமி சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூர்யில் பணியாற்றும் பேராசிரியை  நிர்மலா தேவி  மாணவிகளை பாலியல் செயலுக்கு தூண்டியதாக எழுந்த புகார் குறித்து விளக்கம் அளிக்க வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெண் நிருபர் ஒருவரின் கன்னத்தை தடவிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பேராசிரியை நிர்மலா தேவி விளக்கம் அளிப்பதற்காக  ஆளுநர் புரோகித் பிரஸ் மீட் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இப்பிரச்சனை குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஆளுநர் பதில் அளித்தார்.

தொடர்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய லட்சுமி சுப்ரமணியன் என்ற  பெண் நிருபரை பாராட்டும் வகையில், நீங்க என் பேத்தி மாதிரி எனக் கூறி அவரது கன்னத்தைத் தடவினார். இது அங்கு கூடியிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அந்த பெண் நிருபர் ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் செய்தியாளர் சந்திப்பு முடியும்போது நான் ஆளுநரிடம் ஒரு கேள்வி எழுப்பினேன். ஆனால் என்னுடைய கேள்விக்கு பதில் அளிக்காமல் ஒரு அதிகாரி என்ற தோரணையில் என்அனுமதி இல்லாமல் என் கன்னத்தைத் தடவினார் என குறிப்பிட்டுள்ளார்.

அவர்  என்னை பாராட்டுவதற்காக ஒரு தாத்தாவைப் போல் பாசமாக தட்டியிருக்கலாம். ஆனால், ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரைத் தொடுவது என்பது மிகவும் தவறானது. அவரின் மீதான பாலியல் குற்றச்சாட்டை நிராகரித்து விட்டு, அவர் இதை செய்வது மிகவும் நாகரிகமற்றது” என்று கூறியுள்ளார்.

மேலும் ஆளுநர் கன்னத்தில் தட்டியதை நான் அருவெருப்பாக உணர்ந்தேன். பல முறை என் கன்னத்தை கழுவி சுத்தப்படுத்தியபோதும், அந்த கறை போகவில்லை என தெரிவித்துள்ளார்.

புரோகித் அவர்களே உங்கள் செயலால் நான் மிகுந்த ஆத்திரமும் கோபமும் அடைந்துள்ளேன். என்னுடைய தாத்தா போன்ற வயதுடையவர் என்று கூறிக்கொண்டு, என்னுடைய அனுமதி இல்லாமல், என் கன்னத்தை தட்டுவது உங்களுக்கு சாதாரணமாக இருக்கலாம், ஆனால் என்னைப் பொறுத்தவரை அது தவறு என்றும் அந்த பெண் நிருபர் சுட்டிக்காட்டியுள்ளார்.