தேனி மக்களவை தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்க.தமிழ்ச்செல்வன், ஓ.பி.எஸ் மகன் ரவீந்திராத் ஆகியோர் போட்டியிடுவதால் விஐபி தொகுதியாக மாறி விட்டது. இந்த நிலையில் தேனி தொகுதியை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்காக குஷ்பு விட்டுக் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

தேனி தொகுதியில் அமமுகவில் தங்க தமிழ்ச்செல்வனும், அதிமுக சார்பில் ஓ.பி.ரவீந்திரநாத்தும் போட்டியிடுகின்றனர். இங்கு இருமுறை வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆரூண் மீண்டும் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களமிறக்கப்பட்டுள்ளதால் தேனியில் தேர்தல் களம் இன்னும் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. ஆரூணுக்கு  உடல் நலம் சரியில்லாததால் தனது மகன் அசன் ஆரூணுக்கு சீட்டைக் கேட்டு வந்தார். முக்கிய விஐபிகள் இருக்கும் போது ஆரூணின் கோரிக்கையை நிராகரித்து விட்டது காங்கிரஸ் தலைமை.  

தேனி தொகுதியை குறிவைத்து காங்கிரஸ் தலைமையிடம் தனக்கு ஒதுக்குமாறு கேட்டு வந்துள்ளார். அதனை தொடர்ந்தே தேனி ஆட்சியர் அலுவலகத்தில் குஷ்பூ பெயரில் தேர்தல் விண்ணப்ப படிவங்களும் வாங்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென முன்னாள் காங்கிரஸ் தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

ஓ.பி.எஸ் மகனுக்கும், அமமுகவுக்கும் டஃப் கொடுக்க குஷ்புவை தேனி தொகுதியில் களமிறக்க காங்கிரஸ் தலைமையும் முடிவெடுத்து இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குஷ்புவிடம் கேட்டுக் கொண்டதால் வேட்பாளர் போட்டியிலிருந்து விலகிக் கொண்டுள்ளார். அதன்பிறகே தேனி தொகுதி வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார் என்கிறது சத்தியமூர்த்தி பவன் வட்டாராம்.