kushboo criticises dinakarans victory while thirunavukarasar wants to make a knot with him

ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற டிடிவி தினகரனின் வெற்றி குறித்து இன்று அக்கட்சியின் குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். 

புதுதில்லியில் செய்தியாளர்களை சந்தித்தார் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு. அப்போது, ஜெயலலிதா மிகப் பெரிய தலைவர். ஆர்.கே.நகர் தேர்தலில் ஜெயலலிதாவைவிட, தினகரன் அதிகம் ஓட்டு பெற்றுள்ளார். ஜெயலலிதா இருந்தபோது அவரை தான் கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறேன்.

 ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு டிடிவி தினகரன் அல்ல. தினகரனின் குறிக்கோள் தமிழகத்தில் ஆட்சியைக் கலைப்பது என்ற எண்ணம். தான் என்றும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது என்றும் கூறியுள்ளார். 

ஆனால், தினகரனின் வெற்றியை அக்கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் எப்படிப் பார்க்கிறார்? என்றால், தினகரன் பக்கம் சாயும் நிலையிலேயே திருநாவுக்கரசர் இருக்கிறார் என்றும், திமுக.,வை கழற்றிவிட்டு புது கூட்டணிக்கு அச்சாரம் போட வியூகம் அமைப்பதாகவும் அரசியல் அரங்கில் பேசப் பட்டு வருகிறது. 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தினகரனுக்கு திருநாவுக்கரசர் வாழ்த்து தெரிவித்திருப்பது சாதாரண விஷயமாக பார்க்கப் பட்டாலும், அவர் பயன்படுத்திய, ‘மகத்தான வெற்றி பெற்ற’ என்ற சொற்கள், புதிய கூட்டணிக்கு திட்டமிடுவதாக காங்கிரஸ் வட்டாரத்திலேயே பரபரப்பாகப் பேசப் படுகிறது. 

காங்கிரஸுக்கும் கோஷ்டிப் பூசலுக்கும் எந்தப் பிரிவும் என்றும் நேராது என்பது போல் ஒவ்வொரு பக்கத்தில் இருந்தும் ஒவ்வொரு கருத்து வெளிவரும். அப்படித்தான், திமுக., தரப்புடன் நட்பு பேண ஒரு குழு ஈடுபட்டிருக்கும் போது, அதற்கு எதிராக திருநாவுக்கரசர் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. 

அண்மையில் இளங்கோவன் பிறந்த நாள் விழாவில் சிதம்பரம், தங்கபாலு என காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதில் ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் என பலரும் பங்கேற்றனர். அப்போது தி.மு.க., தலைமையில் மதிமுக., விசிக., காங்கிரஸ் என அனைத்தும் ஓர் அணியில் சேரும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதை வெளிக்காட்டும் விதமாக, 'அடுத்த முதல்வராக ஸ்டாலினும், பிரதமராக ராகுலும் வருவார்கள்' என அப்போது குஷ்பு சொன்னார்.

ஆனால், இப்படி ஒரு பேச்சு வரும் என்று தெரிந்தே துபாய்க்கு சுற்றுலா சென்று விட்டார் திருநாவுக்கரசர். அங்கிருந்து திரும்பிய உடனே, தினகரனின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து, காங்கிரஸின் எதிர் கோஷ்டியினரை அதிரவைத்துள்ளார். 

தினகரனுடன் திருநாவுக்கரசருக்கு நெருக்கம் உண்டு என்றும், திருநாவுக்கரசரின் சம்பந்தி தினகரன் அணியில் உள்ளதால், இந்த நட்பு காரணமாக தினகரனுடன் காங்கிரஸ் கூட்டணி அமைய அவர் விரும்புவதாகவும் கூறப்படுகிறது. மேலும், தினகரன் கைக்கு அதிமுக., வந்து விடும் என்றும், ஆர்.கே.நகரில் தினகரனுக்கு விழுந்த ஓட்டுகள் எல்லாம் அதிமுக., ஓட்டுகள் என்றும், தினகரன் அதிமுக.,வின் தலைமை ஏற்கும் போது அதிமுக., பலம் பெறும். அதே நேரம் ஸ்டாலின் தலைமையில் திமுக., பலம் இழந்துவிட்டதையே ஆர்.கே.நகர் காட்டுகிறது என்று தன் ஆதரவாளர்களிடம் பேசினாராம். எனவே எதிர்காலத்தில் தினகரன் உள்ள அதிமுக.,வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைவது கட்சிக்கு நல்லது என்று அவர் கூறியதாக தகவல்கள் கசிந்துள்ளது. இருப்பினும் குஷ்புவோ வழக்கம் போல், தினகரன் வெற்றி பெற்றதை விமர்சித்து வருகிறார்.