குரங்கணியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட  விசாரணை அதிகாலி அதுல்ய மிஸ்ரா இன்று தனது விசாரணையைத் தொடங்கினார்.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் சென்னை மற்றும் ஈரோடு பகுதியைச் சேர்ந்த 36 பேர் கடந்த 11-ந் தேதி மலையேற்ற பயிற்சிக்கு வந்தனர். அப்போது ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.

பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட மேலும் சிலர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். இந்த தீ விபத்து குறித்து விசாரித்து 2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் அதுல்யமிஸ்ராவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து விசாரணை நடத்துவதற்காக அதல்ய மிஸ்ரா  தலைமையிலான குழுவினர் நேற்று போடி வந்தனர். இதையடுத்து இன்று அதிகாலை அதுல்ய மிஸ்ரா தலைமையிலான குழு தனது விசாரணைணைத் தொடங்கியது. முதல் கட்ட விசாரணைக்குப் பிறகு  கொழுக்கு மலை வனப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்த உள்ளனர்.

மலையேற்ற பயிற்சிக்கு அனுமதி அளித்தது, மீட்பு பணியில் ஈடுபட்ட வனத்துறை, தீயணைப்புத்துறை, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் போலீசாரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

மேலும் காட்டுத் தீயில் தப்பி காயமடைந்தவர்களிடமும் விசாரணை நடத்துகின்றனர். தீ விபத்துக்கான காரணம், மீட்பு பணிகள், எதிர் காலத்தில் காட்டுத் தீ ஏற்படாமல் தடுப்பது, மீட்பு பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டியவை உள்ளிட்ட அறிக்கையை தமிழக அரசுக்கு தாக்கல் செய்ய உள்ளனர்.

போடியில் தொடர்ந்து 2 மாதம் விசாரணை நடத்த உள்ளதால் போடி தாலுகா அலுவலகத்தில் தற்காலிக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குரங்கணி மற்றும் தேனியிலும் அவர் தங்கி விசாரணை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.