மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உயிரைக் கொடுத்து, கொண்டு வந்த ஆட்சியை டிடிவி தினகரன் கலைக்க முயற்சிப்பதாகவும், தினகரன் பசுந்தோல் போர்த்திய புலி என்று தெரிந்து எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் எங்களிடம் வருவார்கள் என்றும் குன்னம் எம்.எல்.ஏ. ராமசந்திரன் கூறியுள்ளார்.

சென்னையில், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. ராமசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சசிகலாவால் அதிமுகவில் சேர்க்கப்பட்ட தினகரன், கட்சியை கைப்பற்ற நினைத்ததால்தான் அவரை கட்சியில் இருந்து ஜெயலலிதா நீக்கினார். டிடிவி தினகரன் கூறியதைப்போல் 2001 இல் கட்சியில் சேரவில்லை. 

டிடிவி தினகரன், கட்சிக்காக எத்தனை முறை சிறைக்கு சென்றுள்ளார் என்பதை அவர் விளக்க வேண்டும். டிடிவி தினகரனுக்கும், வெங்கடேசுக்கும் பதவி அளித்ததில் குடும்ப அரசியல் இல்லையா?

ஆட்சியை கலைக்கும் தொணியில் டிடிவி தினகரன் தொடர்ந்து பேசி வருகிறார். தினகரன் பசுந்தோல் போர்த்திய புலி என்று தெரிந்து எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் எங்களிடம் வருவார்கள்.

2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜெயலலிதாவை கவனிப்பதை சசிகலா குடும்பம் குறைத்து கொண்டது. மறைந்த ஜெயலலிதா உயிரைக் கொடுத்து கொண்டு வந்த ஆட்சியை டிடிவி தினகரன் கலைக்க முயற்சிக்கிறார்.

ஜெயலலிதா மிக விரைவில் மரணம் தழுவும் வகையில் செயல்பட்டது யார்? ஜெயலலிதா துவங்கியதாக கூறப்படும் நிறுவனத்தின் பங்குதாரர்கள் யார்? அரசியல் பணிகள் குறித்து டிடிவி அடுத்த கூட்டத்தில் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.