கோவையில் ‘ஹாட்’ டாபிக்கான ‘ஹாட்பாக்ஸ்..’ திமுகவினரை வளைத்து பிடித்த போலீஸ் !!
கோவையில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக திமுகவினரால் கொண்டுவரப்பட்ட ஆயிரக்கணக்கான ஹாட் பேக்குகள் குனியமுத்தூர் போலீசார் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு, வரும் 19ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. தமிழக தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கிறது. கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில், 72 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, 24 மணி நேர தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கோவை மாநகராட்சி 92வது வார்டு சுகுணாபுரத்தில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக TN37 BR 4621 என்ற எண் கொண்ட டாடா ஏஸ் வாகனத்தில் திமுக வினரால் கொண்டுவரப்பட்ட ஆயிரக்கணக்கான ஹாட் பேக்குகள் குனியமுத்தூர் போலீசார் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக சார்பில் சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் இன்பதுரை கோவை மாவட்ட ஆட்சியரிடம் நள்ளிரவில் தொலைபேசியில் புகார் தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து போலீசார் வட்டாரத்தில் விசாரித்த போது, கோவை குனியமுத்தூர், சுகுணாபுரம் ஆகிய பகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக திமுகவை சேர்ந்த கிருபாகரன் என்பவரது வீட்டிற்கு சிறிய சரக்கு ஆட்டோவில் கரூரை சேர்ந்தவர்கள் ஹாட்பாக்ஸ்களை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் தெரிந்த அதிமுகவினர் போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது' என்று கூறினர்.