கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால்   கபினி  மற்றும் கேஆர்எஸ் அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஜுலை மாதத்துக்கான தண்ணீரை திறந்துவிட கர்நாடக முதலமைச்சர்  குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். கர்நாடக அணைகளில்  தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலையில் உபரி நீரை திறந்து  விட்டு விட்டு தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டபடி ஜுலை மாதத்துக்கான நீர் திறந்துவிட்டதாக குமாரசாமி நாடகம் ஆடுகிறார்  என  தமிழக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் தலைக்காவிரி, பாகமண்டலா, விராஜ்பேட்டை, மடிகேரி, கோணிகொப்பா, சித்தாப்புரா, சுண்டிகொப்பா, சோமவார்பேட்டை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. 


இந்த கனமழை காரணமாக காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையால் கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.


கபினி அணை அதன் முழு கொள்ளவை எட்டியுள்ள நிலையில் மேலும் அதில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலையில் அங்கிருந்து கிட்டத்தட்ட 40000 கன அடி  உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.


இதே போல்  கேஆர்எஸ் அணையும்  முழு கொள்ளவை எட்டும் நிலையில் உள்ளது. எனவே இரண்டு அணைகளில் இருந்தும் உபரி நீர்  திறந்து விடப்படுகிறது.


இதனிடையே கடந்த 2 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற  காவிரி மேலாண்மை  ஆணையத்தின் முதல் கூட்டத்தில்  ஜுலை மாதத்துககான  தமிழகதுக்குரிய 31 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறந்துவிட  உத்தரவிடப்பட்டது. அப்போது  அதற்கு குமாரசாமி கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான நீரை உடனே திறக்க கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு, அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி இன்று உத்தரவிட்டுள்ளார். 


ஏற்கனவே தமிழகத்திற்கு விநாடிக்கு 40,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்நிலையில் உபரி நீரை திறந்துவிட்டு விட்டு காவிரி மேலாண்மை  ஆணைய உத்தரவுப்படி  தண்ணீர் விட்டுள்ளதாக  குமாரசாமி  நாடகம் ஆடுவதாக  தமிழக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.