மொழி உணர்வு மீது கைவைத்தால்  1967ஆம் ஆண்டு காங்கிரஸ் பேரியக்கம் வீழ்ச்சி அடைந்ததோ, அதே நிலை பாஜகவுக்கும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எச்சரித்துள்ளார்.

இந்திக்கு அலுவல் மொழி அந்தஸ்தை வழங்கிய தினமாகக் கொண்டாடப்படும் செப்டம்பர் 14ஆம் தேதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொதுவாக ஒரு மொழி நிச்சயம் தேவை, இந்தியாவை எந்த மொழியால் இணைக்க முடியுமென்றால், அது இந்திதான். மக்கள் தங்கள் தாய் மொழிகளுடன் இந்தியையும் சேர்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசியிருந்தார். அமித்ஷாவின்  கருத்துக்கு  பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்த நிலையில், நேற்று  நெல்லை மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் தச்சநல்லூரில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய  முன்னாள் அமைச்சரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அமித் ஷாவின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய முனுசாமி, “உலக அளவில் அதிகம் பேரால் பேசக்கூடிய மொழி இந்தி. அதனால் அது ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும் என்று அமித்ஷா பேசியிருக்கிறார். அவருக்கு இந்த மேடையில் ஒரு பதிலை சொல்ல விரும்புகிறேன். 

ஒரு மாநிலத்தின் உரிமை, மக்களின் உணர்வு, மொழி, கலாச்சாரம் ஆகியவற்றின் மீது கைவைத்தால் 1937ஆம் ஆண்டு ராஜ கோபாலாச்சாரி எப்படி வீழ்ந்தாரோ? மொழி மீது கைவைத்ததால் 1967ஆம் ஆண்டு காங்கிரஸ் பேரியக்கம் எப்படி வீழ்ச்சிஅடைந்ததோ, அதே நிலை தான் பிஜெபிக்கும்  ஏற்படும் என்பதை கோடிட்டு காட்ட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.