ஜெயலலிதா மரணம் தொடர்பாக  சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி பரிந்துரை செய்தால் மட்டுமே இரு அணிகள் இணைவது குறித்து முடிவு செய்யப்படும் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் அணி சார்பில் அதிமுகவின் இரு அணிகளும் இணைவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, ஓபிஎஸ்  தரப்பில் வைக்கப்பட்ட இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே பேச்சு வார்த்தைக்கு வர முடியும் என தெரிவித்தார்.

முதலாவதாக ஜெயலலிதா மரணம் தொடர்பாக  சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி பரிந்துரை செய்தால் மட்டுமே இரு அணிகள் இணைவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

மேலும் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும்..ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளர் என்றும் தினகரன் துணைப் பொதுச் செயலாளர் என்றும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த பிரமாணப் பத்திரத்தை திரும்பப் பெற வேண்டும் என்று முனுசாமி வலியுறுத்தினார்.

மேலும் சசிகலா, தினகரன் ஆகியோரிடம் ராஜினாமா கடிதம் பெற வேண்டும் என்றும், அதை ஜெயலலிதா எப்படி அறிக்கை மூலம் ஊடகங்களுக்கு வெளியிடுவாரோ அதைப் போன்று அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே பேச்சுவார்தத்தை நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.