KP Munusamy Interview Against MP Thambi durai
அதிமுக-வின் சட்டத்திட்டங்கள் தெரிந்தும் தம்பிதுரை சசிகலாவின் விசுவாசியாக செயல்பட்டு வருகிறார் என்று பன்னீர் அணியை சேர்ந்த கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
தர்மபுரியில் இன்று பேசிய கே.பி.முனுசாமி கூறியதாவது, “அதிமுக-வின் சட்டத்திட்டங்கள் அனைத்தும் தெரிந்து இருந்தும் தம்பித்துரை உண்மையை மறைத்து சசிகலாவுக்கு விசுவாசமாக செயல்படுகிறார். தம்பிதுரையின் உண்மையான தலைவர் சசிகலா தான். சசிகலா மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் உள்ள விசுவாசத்தால் அதிமுக-வின் சட்டத்திட்டத்தை மீறி சசிகலாவைப் பொதுச்செயலாளராக்கினார்.
புரட்சிதலைவரும், புரட்சி தலைவியும் அதிமுக-வில் பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்கும் முழு உரிமையும் அடிப்படை தொண்டனுக்கு மட்டும்தான் உள்ளது என்று கூறி உள்ளனர். அந்த உண்மை நிலையை மறைத்து சசிகலா நியமனம் செய்யப்பட்டார்.
சசிகலாவும் அவரது குடும்பமும் முழுமையாக அதிமுக-வில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். ஜெயலலிதாவின் மீது உண்மையான பாசம் கொண்டவர்கள் அவரை தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள் அனைத்து தொண்டர்களின் எண்ணமும் இதே தான்.

மேலும், மக்களால் ஆதரவுப் பெற்ற தலைமைதான் வேண்டும் என விரும்புகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆட்சி தொடர வேண்டும் என்று மக்களும், தொண்டர்களும் விரும்புகின்றனர். சேலத்தில் நடந்த ஓ.பி.எஸ் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர், எம்.எல்.ஏ. தவிர அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். உண்மையான தொண்டர்கள் சேலத்தில் திரண்டதைக் காண முடிந்தது. தமிழகத்தில் நடப்பது ஜெயலலிதா ஆட்சி இல்லை.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து உண்மையை வெளிப்படுத்தவே சி.பி.ஐ. விசாரணையை கேட்கிறோம். சசிகலா மூலம் முதலமைச்சர் ஆனவர்தான் எடப்பாடி பழனிசாமி. அவரை நாங்கள் முதலமைச்சராக ஏற்றுக்கொள்ள முடியாது. விரைவில் அதிமுக அணிகள் இணைந்து தமிழகத்தில் நல்லாட்சி தொடர இருப்பதை யாராலும் தடுக்க முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
