KP Munusamy - Journalists meeting
பாஜக ஆளும் மாநிலம் என்னென்ன வசதிகள் உள்ளது என்பதை அறிந்துகொண்டு தமிழகத்தை ஒப்பிடவும் என்றும் டிடிவி தினகரன் ஒரு ஜோசியர்போல் நடந்து கொள்கிறார் என்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி நகர ஒன்றாவது வார்டில் ரமலான் பண்டிகையொட்டி ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் விழா
நடைபெற்றது. இதில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஏற்கனவே பொதுக் குழுவில் கொண்டு வந்த தீர்மானத்தை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்து இருந்தோம். பொதுச்செயலாளர் என்பதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற தலைமையின்கீழ் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செயல்படும் என தெரிவித்து இருந்தோம். அதை தேர்தல் ஆனையம் ஏற்று கொண்டதற்கு நன்றி தெரிவித்து கொள்கின்றேன் என்றார்.
தேர்தல் ஆணையம் ஏற்றுகொண்டதை அடுத்து நிர்வாகிகள் மாற்றம் என்பது உட்கட்சி விவகாரம் அதை பகிர்ந்துகொள்ள முடியாது.
ஜனநாயக நாட்டில் யார் யாரோ கட்சி ஆரம்பிக்கின்றனர். அதில் திவாகரனும் ஒருவர்.
6 மாதத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல் வரும் என தினகரன் தெரிவித்த கருத்துக்கு அவர் ஜோசியரா என எனக்கு தெரியவில்லை; அவர் ஜோசியராக இருந்தால் அந்த ஜோஷியம் பொய்க்கலாம் அல்லது பொய்க்காமலும் போகலாம். ஜோசியர் போல் தினகரன் நடந்து கொண்டு இருக்கிறார் என்றார்.
பொன். ராதாகிருஷ்ணன் சில சமயங்களில் ஏதேதோ கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார் ஏற்கனவே திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்து தமிழகம் முன்னேறவில்லை என சொல்லிக்கொண்டு இருக்கிறார். நான் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு சில கேள்விகளை கேட்கிறேன். இன்று தமிழக சுகாதாரத்துறை முன்னிலையில் உள்ளது.
அதேபோல் உயர்கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு 49 சதவீதம் பேர் உயர்கல்வியில் தமிழகத்தில்தான் சேருகிறார்கள்.
உள்கட்டமைப்பு இடங்களில் சாலைகள் சிறப்பாக உள்ளது. அதே சமயம் பாஜக ஆட்சி செய்யும் பல மாநிலங்களில் கிராமங்களில் சாலை வசதி இல்லை. தமிழகத்தில் ஜீவ நதிகள் இல்லாத காரணத்தால் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. இது எல்லாம் அவருக்கு தெரியாமல், ஏதோ வாய்க்கு வந்தார் போல் பேசிக் கொண்டிருக்கிறார்.
ஒரு அமைச்சராக இருக்கக் கூடியவர் தன்னைப் புரிந்து கொண்டும், தன் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களின் நிலைமைகளைப் புரிந்து கொண்டு பேச வேண்டும். அவர் தேவையில்லாத கருத்துக்களை சொல்லிக் கொண்டு இருக்கிறார் என்று கே.பி. முனுசாமி பேசினார்.
