கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் கோவில் பிரசாதத்தில் விஷம் வைத்து கணவன் மனைவியை கொல்ல நடத்தப்பட்ட சதியில் கணவன் உயிரிழந்துள்ளார், மனைவி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமத்திக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம்  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷம் வைத்த நபரை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சென்னை காசிமேடு சூரிய நாராயண தெருவை சேர்ந்தவர் கார்த்திக் 35. தனியார் கல்லூரியில் ஆசிரியராக வேலை செய்து வந்த இவர் ஆட்குறைப்பு காரணமாக வேலையிழந்து  காசிமேடு பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். இவருக்கு சரண்யா 30 என்கிற மனைவியும் சர்வேஷ் 8 , சர்வின் 6 , என்ற இரு மகன்களும் உள்ளனா். நேற்று மாலை முல்லை நகர் பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தபோது கார்த்திக்  மயங்கி விழுந்துள்ளார். சரண்யாவுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். சரண்யா தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். 

வரிடம் எம்கேபி நகர் போலிசார் நடத்திய விசாரணையில் கார்த்திக் சுமார் 4 வருடத்திற்கு முன்பு எம்.கே.பி நகர் பகுதியில் உள்ள வேலாயுதம் என்பவரிடம் அரசு வேலைக்காக ரூபாய் 4 லட்சம் கொடுத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் வேலாயுதம் அரசு வேலையும் வாங்கி தராமல் பணத்தையும் திருப்பி தராமலும் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை வேலாயுதம் உங்களுக்கு அரசு வேலைக்கான நியமன கடிதம் வந்துள்ளதாகவும் அதை நேரில் வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார். இதையடுத்து கார்த்திக் தனது மனைவி சரண்யாவுடன் நேற்று மாலை எம்.கே.பி நகர் பகுதியில் உள்ள வேலன் (எ) வேலாயுதம் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வேலாயுதம் ஸ்ரீரடி சாய்பாபா பிரசாதம் என்று கூறி ஒரு பொடியையும் ,பஞ்சாமிர்தத்தையும் கார்த்திக் மற்றும் சரண்யாவுக்கு கொடுத்து சாப்பிட கூறியுள்ளார். முதலில் கார்த்திக் சாப்பிட்ட நிலையில் அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே கார்த்திக் தண்ணீர் குடித்துவிட்டு பொடியை சாப்பிட்டு கொண்டிருந்த சரண்யாவை சாப்பிட வேண்டாம் என்று கூறி உடனடியாக அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில்புறப்பட்டுள்ளனா்.

அப்பொழுதுதான் இருவரும் மயக்கமுற்று கீழே விழுந்ததும் , கார்த்திக் உயிர் இழந்ததும் தெரியவந்தது. மேலும் சரண்யா போலிசாரிடம் கூறுகையில் ஒரு பொடியையும்,பிரசாதத்தையும் கொடுத்து வேலாயுதம் சாப்பிட சொன்னதாகவும் அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து எம்.கே.பி நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். போலீசார் விசாரணையில் வேலாயுதம் நேற்று  தலைமறைவாகி இருந்த நிலையில்  அவரை கைது செய்து போலீசார்  விசாரணை நடத்தினர், அதில் 
 இவர் கிண்டியில் உள்ள  உணவு பாதுகாப்பு துறை ஆய்வகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். கார்த்திக்  தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்யவே ஆய்வகத்தில் இருந்த சல்ஃபூரிக் பவுடரை பிரசாதத்தில் கலந்து கொடுத்ததாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்