வரிந்து கட்டும் வேட்பாளர்கள்.. யாருக்கு மேயர் ‘சீட்’ - கோவை சஸ்பென்ஸ் !
கோவை மேயர் வேட்பாளர்களாக யார் யார், எந்தெந்த கட்சிகள் சார்பில் போட்டியிடுவார்கள், யாருடைய பெயர்கள் எல்லாம் பரிசீலனையில் உள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
கோவையில் நடக்கும் மேயர் தேர்தல் ரேஸ் நாளுக்கு நாள் சூடுபிடித்துக் கொண்டே வருகிறது. கோவை மேயர் வேட்பாளர்களாக யார் யார், எந்தெந்த கட்சிகள் சார்பில் போட்டியிடுவார்கள், யாருடைய பெயர்கள் எல்லாம் பரிசீலனையில் உள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த தேர்தலில் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த போதிலும், கோவை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் அக்கட்சிக்கு தோல்வியே மிஞ்சியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னும் கோவை அதிமுக கோட்டை என்பது நிரூபணமாகியுள்ளது.
உள்ளாட்சி தேர்தலிலும் இதே வெற்றியைக் குறி வைத்து அதிமுகவினர் களமிறங்கியுள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் கோவை மாநகரில் உள்ள அனைத்து எம்எல்ஏக்களும் தீவிரமாக களமிறங்கி தேர்தல் பணியாற்ற துவங்கியுள்ளனர். அதிமுகவின் கோவை மேயர் வேட்பாளர் யார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. அதில் ஆண் மேயராக இருந்தால் முன்னாள் மேயர் செ.ம வேலுச்சாமியின் பெயரும், பெண் மேயராக இருந்தால் காளப்பட்டியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் செந்திலின் மனைவி கிருபாளினி பெயரும் பரிசீலனை செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
எதிர்க்கட்சி முகாம் இப்படியிருக்க, ஆளுங்கட்சி பரபர என களத்தில் இறங்கி வேலை செய்து வருகின்றனர். செந்தில் பாலாஜி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு, கோவை திமுகவே உற்சாகமாக இருக்கிறது. தன்னுடைய 50 பேர் கொண்ட ஒரு டீமை கோவை முழுக்க சுத்தவிட்டிருக்கிறார் செந்தில் பாலாஜி. அவர்கள் கொடுத்த ரிப்போர்ட் படி, கனகச்சிதமாக ஸ்டெப் பை ஸ்டெப் பாலோ செய்து வருகிறார். சிட்டியில் கவனம் செலுத்துவதை விட, கிராமப்புற மக்கள் இடையே கவனம் செலுத்தி வருகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
மக்கள் குறைதீர் முகாம் என்ற பெயரில் வீதிதோறும் சென்று ‘முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி, மக்களுக்கான ஆட்சி’ என்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இது மக்களிடையே நல்ல வரேவேற்பை பெற்றிருக்கிறது என்றும் கூறுகின்றனர். மக்கள் மட்டுமல்ல, திமுகவினரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய அளவுக்கு பணத்தினை செலவு செய்து வருகிறார்.கடந்த வாரம் நாம் சொன்னதை போல, திமுக மேயர் ரேஸில் அமைச்சர் எ.வ வேலுவின் தீவிர ஆதரவாளர் மீனா ஜெயக்குமார் பட்டியலில் முன்னணியில் இருக்கிறார்.
கமலின் மக்கள் நீதி மய்யம் சார்பாக கோவையை சேர்ந்த கல்லூரி அதிபர் அனுஷா ரவி என்பவரை கோவை மேயர் தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் திருப்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.முக்கிய மூன்று கட்சிகளின் வேட்பாளர்களின் பட்டியல் கோவையை மட்டுமல்ல, தமிழகத்தின் கோட்டையையும் பரபரப்பாக்கி இருக்கிறது.