kovai full of banners and cut outs

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகும் கோவையில் சாலையோர நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருக்கும் பேனர்களும் கட் அவுட்களும் அகற்றப்படவில்லை.

பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக பேனர்களோ கட் அவுட்களோ வைக்கக்கூடாது எனவும் உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்களை போட்டு பேனர்களோ உயிருடன் இருப்பவர்களுக்கு கட் அவுட்களோ வைக்கக்கூடாது எனவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனாலும் நீதிமன்றத்தின் உத்தரவை எல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்காத தமிழக அரசு சார்பில், கோவையில் டிசம்பர் 3-ம் தேதி கொண்டாடப்பட இருக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக கடந்த மாதம் 20ம் தேதியிலிருந்தே பேனர்களும் கட் அவுட்களும் அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன.

பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக என்பது தெரிந்தே கோவை அவினாசி சாலையில் சாலையையும் நடைபாதைகளையும் ஆக்கிரமித்து பேனர்களும் கட் அவுட்களும் அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டன.

சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவில் மோதி ரகு என்ற இளைஞர் கடந்த மாதம் 21-ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கோவை மக்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர்களும் அலங்கார வளைவுகளும் அகற்றப்பட்டன. ஓர் உயிர் பறிபோன அந்த சமயத்திலும் கூட முழு அனுமதியுடன் தான் பேனர்கள் வைக்கப்பட்டன என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மிகவும் பொறுப்புடன் பதிலளித்திருந்தார்.

நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல், பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்களும் கட் அவுட்கள் வைக்கப்பட்டதால்தான் ரகு உயிரிழந்தார் என்றும் எனவே நீதிமன்ற உத்தரவை மதிக்காத கோவை அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கார்த்திக் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பேனர்கள் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டுகின்றனர். பேனர்கள் விவகாரத்தில் விதிகளை பின்பற்றுவதில்லை. விதிகளை மீறி சாலையை ஆக்கிரமித்து பேனர்களையும் கட் அவுட்களையும் வைக்க அரசு அதிகாரிகள் எப்படி அனுமதி கொடுக்க முடியும்? 

சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுதான் ரகுவின் உயிரிழப்புக்குக் காரணம் என தெளிவாக தெரிகிறது. எனினும் மரணம் தொடர்பான விசாரணைக்குள் செல்ல விரும்பவில்லை. விதிகளை மீறி அனுமதியில்லாமல், சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து பேனர்கள், கட் அவுட்கள் மற்றும் அலங்கார வளைவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். எந்த கட்சியினராக இருந்தாலும், விதிகளை மதித்து நடக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், இப்போதும் நீதிமன்றத்தின் உத்தரவு மதிக்கப்படவில்லை. கோவையின் பல்வேறு பகுதிகளில் சாலைகளையும் நடைபாதைகளையும் ஆக்கிரமித்து பேனர்களும் கட் அவுட்களும் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அதிகாரிகள் அதை அகற்றுவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. 

கோவையை ஆக்கிரமித்திருக்கும் பேனர்களை பார்க்கும்போது, பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக இருக்கும் பேனர்களையும் கட் அவுட்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரும் போலீசாரும் நினைக்கக்கூட இல்லை என்பதையே காட்டுகிறது.