உத்தர பிரதேசம் மாநிலத்தின் முதலமைச்சராக  யோகி ஆதித்யாநாத் பதவியேற்ற பின்னர் அம்மாநிலம் முழுவதும் அனாதையாக சுற்றித்திரியும் பசு மாடுகள் மற்றும் வயதான பசுக்களை பராமரிப்பதற்கு அரசின் நிதியில் இருந்து கோசாலைகள்  அமைக்கப்பட்டன.

அனைத்து மாவட்டங்களிலும் இதற்காக நிலமும் நிதியும் ஒதுக்கப்பட்டு இந்த கோசாலைகள் இயங்கி வருகின்றன. இந்த கோசாலைகள் அமைக்கப்பட்டுள்ள மாவட்டத்தின் ஆட்சியர்கள் கோசாலைகளின் தலைவர்களாகவும் பொறுப்பு வகித்து வருகின்றனர்.

இந்நிலையில், மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள மத்வாலியா கோசாலையில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்  இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மத்வாலியா கோசாலையில் சுமார் 2500 பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருவதாக ஆவணங்களில் உள்ளது. ஆனால், அங்கு வெறும் 954 பசுக்கள் மட்டுமே இருந்துள்ளன.

மேலும், கோசாலைகள் அமைப்பதற்காக 500 ஏக்கர் நிலம் அளிக்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதில் 328 ஏக்கர் நிலம் விவசாயிகள் மற்றும் தனிநபர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக உயரதிகாரிகளின் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, மஹாராஜ்கஞ்ச் மாவட்ட  ஆட்சியரும் அந்த கோசாலையின் தலைவருமான அமர்நாத் உபாத்யாயா, துணை ஆட்சியர் சத்யம் மிஷ்ரா, முன்னாள் துணை ஆட்சியர்  நிச்லால் தேவேந்திர குமார் மற்றும் கால்நடை துறை அதிகாரிகள் 3 பேர் உள்ளிட்ட 6 பேரை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.