ஒரு காலத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்ட அமைச்சர்களின் ஆதிக்கத்துடன் இருந்த சட்டப்பேரவை தற்போது கொங்கு மண்டலத்தை சேர்ந்த கவுண்டர் ஜாதி அமைச்சர்களின் கோட்டையாகியுள்ளது.   தி.மு.க ஆட்சியில் இருக்கும் போது முதலமைச்சர் கருணாநிதிக்கு தளபதிகளாக சட்டப்பேரவையில் செயல்பட்டவர்கள் துரைமுருகன், பொன்முடி மற்றும் எ.வ.வேலு. இவர்கள் மூன்று பேருமே வட மாவட்டங்களை சேர்ந்தவர்கள். அதாவது பொன்முடி விழுப்புரத்தை சேர்ந்தவர். துரைமுருகன் வேலூரை சேர்ந்தவர். எ.வ.வேலு திருவண்ணாமலையை சேர்ந்தவர். எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் கேட்கும் எந்த கேள்வியாக இருந்தாலும் கருணாநிதி சைகை காட்டுவார். இவர்கள் மூன்று பேரில் ஒருவர் எழுந்து பதில் அளிப்பர். இதே பாணியில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போதும் மூன்று அமைச்சர்களின் ராஜியம் தான் சட்டப்பேரவையில் இருக்கும். எதிர்கட்சியினர் எந்த கேள்வி கேட்டாலும் பதில் அளிக்கும் பொறுப்பு ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோருடையது.
இவர்களில் ஓ.பி.எஸ் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர், நத்தம் விஸ்வநாதன் திண்டுக்கல்லை சேர்ந்தவர் வைத்திலிங்கம் தஞ்சையை சேர்ந்தவர்.மூன்று பேருமே தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.  இப்படியாக கடந்த சில ஆண்டுகளாக சட்டப்பேரவையில் ஆதிக்கம் செலுத்தி வந்த வட மற்றும் தென்மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்களின் காலம் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரான பிறகு ஓய்ந்துவிட்டது என்றே கூறலாம்.ஏனென்றால் இப்போது எல்லாம் சட்டப்பேரவையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் பொறுப்பு தங்கமணி, எஸ்.பி.வேலுமணி மற்றும் செங்கோட்டையன் வசம் சென்றுவிட்டது. அவை முன்னவராக ஓ.பி.எஸ் இருந்தாலும் கூட அரசியல் ரீதியிலான எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு தங்கமணியும், எஸ்.பி.வேலுமணியுமே பதில் அளிக்கின்றனர். பேரவையில் வைத்து தினகரனை பேசக்கூட விடாமல் குறுக்கிட்டு எதிர்கேள்விகைள எழுப்பியர் தங்கமணி.  இப்படியாக நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கூட அதிக கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் செங்கோட்டையன் ஆவர். மூன்று பேருமே கொங்கு மண்டலத்தை சேர்ந்த கவுண்டர் ஜாதி அமைச்சர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.