பொதுவாக பிறந்த நாள் சமயங்களில் இது போன்ற அறிக்கைகளை தலைவர்கள் வெளியிடுவது வழக்கம். ஆனால் அதனை எல்லாம் மீறி தொண்டர்கள் தலைவர்களை வரவேற்பது இயல்பான ஒன்று. ஆனால் தான் கொடுத்த அறிக்கையின் படி கட்சி நிர்வாகிகள் குறிப்பாக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட யாரும் தனக்கு எங்கும் வரவேற்பு அளிக்கவே கூடாது என்று திட்டவட்டமான முடிவில் இருந்துள்ளார் ஸ்டாலின்.

பொதுவாக என்னை சந்திக்க வர வேண்டாம் என்று தலைவர்கள் விடும் அறிக்கைகள் இதுவரை பேப்பர் அளவிலேயே இருக்கும். ஆனால் தான் வெளியிட்ட அறிக்கையை தனது சுற்றுப்பயணத்தின் போதும் முழுவதுமாக கடைபிடித்து சொன்னதை செய்த முதலமைச்சர் என்கிற பெயரை எடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

முதலமைச்சராக பதவி ஏற்று சென்னையில் பம்பரமாக சுழன்று வந்தமு.க.ஸ்டாலின் முதல் முறையாக வெளிமாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டார். முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களுக்கு வருகை தர உள்ளதால் மு.க.ஸ்டாலினை வரவேற்க கட்சிக்காரர்கள் தடல் புடல் ஏற்பாடுகள் நடைபெற்றன. அத்தோடு மாவட்ட எல்லைகளில் திமுக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் திமுக மாவட்டச் செயலாளர்கள் அனுமதி கேட்டனர்.

ஆனால் இதனை ஏற்க திட்டவட்டமாக மறுத்துவிட்டார் மு.க.ஸ்டாலின். கொரோனா உச்சத்தில் இருக்கும் சூழலில் தன்னை வரவேற்க திமுக கூட்டம் கூட்டுவதை அவர் விரும்பவில்லை. இதனை அடுத்து கட்சி நிர்வாகிகள் மட்டுமாவது மாவட்ட எல்லையில் வரவேற்பு அளிக்க அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வந்தது. ஆனால் அதற்கும் முடியாது என்று ஒற்றை வார்த்தையில் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அதோடு மட்டும் நிற்காமல், தன்னை வரவேற்கவோ, தன்னை பார்க்கவோ யாரும் வரக்கூடாது என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார் ஸ்டாலின். இந்த அறிக்கை வழக்கமான ஒரு அறிக்கையாகவே பார்க்கப்பட்டது.

பொதுவாக பிறந்த நாள் சமயங்களில் இது போன்ற அறிக்கைகளை தலைவர்கள் வெளியிடுவது வழக்கம். ஆனால் அதனை எல்லாம் மீறி தொண்டர்கள் தலைவர்களை வரவேற்பது இயல்பான ஒன்று. ஆனால் தான் கொடுத்த அறிக்கையின் படி கட்சி நிர்வாகிகள் குறிப்பாக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட யாரும் தனக்கு எங்கும் வரவேற்பு அளிக்கவே கூடாது என்று திட்டவட்டமான முடிவில் இருந்துள்ளார் ஸ்டாலின். இதனால் தான் சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலத்தில் வந்து இறங்கிய ஸ்டாலினை வரவேற்க அதிகாரிகளை தவிர வேறு யாரும் இல்லை.

இதே போல் சேலத்தில் தனது பணிகளை முடித்துக் கொண்டு நேராக ஈரோடு மாவட்டம் பெருந்துரை சென்றார் முதலமைச்சர். அங்கும் கட்சிக்காரர்கள் யாரையும் பார்க்க முடியவில்லை. திமுக எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் மட்டுமே வந்திருந்தனர். சில இடங்களில் மாவட்டச் செயலாளர்களை மட்டுமே அனுமதித்து இருந்தனர். சேலத்தில் இருந்து ஈரோட்டிற்குள் செல்லும் போது எல்லையில் எவ்வித வரவேற்பும் அளிக்கப்படவில்லை. இதே போல் ஈரோட்டில் இருந்து திருப்பூருக்குள் சென்ற போதும் வரவேற்பு கொடுக்கப்படவில்லை.

தொடர்ந்து முதலமைச்சர் கோவை வந்த போதும் இதே பாணியில் தான் நிகழ்வுகள் இருந்தன. முழுக்க முழுக்க அரசு நிகழ்ச்சிகளில் மட்டுமே முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு மாவட்டச் செயலாளர்கள் சிலர் கையோடு அழைத்து வந்திருந்த நிர்வாகிகளை மட்டும் ஸ்டாலின் சந்தித்து , அவர்களை உடல் நலனை பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திச் சென்றார். இதே போல் அரசு விழா நடைபெற்ற அரங்கிற்குள் கட்சிக்காரர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இது போன்று அரசு விழாக்கள் நடைபெறுவது ஆச்சரியம் என்கிறார்கள் அதிகாரிகள்.

மேலும் முதலமைச்சரின் சுற்றுப்பயணத்தின் போது அதிகாரிகளுக்கு மட்டுமே முழு அதிகாரம் வழங்கப்பட்டிருந்ததாகவும், கட்சிக்காரர்கள் யாரும் எந்த விஷயத்திலும் தலையிடவில்லை என்று கூறி புலகாங்கிதம் அடைகின்றனர் அதிகாரிகள். இதே பாணியை முதலமைச்சர் தொடரும் பட்சத்தில் தேவையற்ற செலவுகள் மற்றும் நேர விரயம் தவிர்க்கப்படும்.