கொங்குமண்டல திமுக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் வரும் 21ம் தேதி நடைபெறும் என துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கையில்;- திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் செயலாளர்கள்/பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் 21ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. 

அப்போது, மேற்குறிப்பிட்டுள்ள செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மட்டும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இந்த கூட்டத்தில், கட்சி ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பொதுவாகவே கொங்கு பகுதியில் அதிமுக வலுவாக இருக்கிறது என்பது கடந்த பல தேர்தல்களில் நிரூபிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கொங்கு மண்டலம் உள்ளிட்ட அனைத்து மண்டலங்களிலும் வெற்றிபெற்றது. அதேநேரம், சட்டமன்றத் தேர்தலில் கொங்கு பகுதியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் திமுக இருக்கிறது. இதனிடையே, எடப்பாடி பழனிச்சாமி  முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு கொங்கு பகுதியில் அதிமுக தேர்தல் பணி  நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.