அனைத்து கட்சிகள், சமூக ஆர்வலர்கள், காவல்துறையின் பல்வேறு உயர் அதிகாரிகள், பொதுமக்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆகிய எல்லோருமே சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமென்று வற்புறுத்தியும் கைது செய்யவிடாமல் தடுக்கின்ற அந்த உச்சகட்ட அதிகாரம் படைத்தவர்கள் யார் என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கொலை செய்தவர்களை அரசு காப்பாற்ற முயற்சிப்பதை பார்த்தால் ஆளுங்கட்சிகாரர்களுக்கு இதில் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. குற்றவாளிகளான காவல்துறை அதிகாரிகளுக்கு மருத்துவரும், நீதிபதியும், சிறைத்துறை அதிகாரிகளும் ஒத்துழைப்பு கொடுத்திருப்பதை பார்த்தால் இதன் பின்னணியில் அதிகாரம் படைத்தவர்கள் இருப்பது தெளிவாகிறது. 10 நாட்களாகியும் கொலை செய்தவர்களை தமிழக அரசு கைது செய்வதற்கு தயக்கம் காட்டுகிறது என்றால் கொலைக்கான தடயங்களை அழிப்பதற்கு காலஅவகாசம் கொடுப்பதாகவே தோன்றுகிறது. 
சாமானிய மக்களே தடயங்களை அழித்து விடுவார்கள் என்று சொல்லி பிணையில் கூட வர முடியாதபடி சிறையில் அடைப்பது காவல்துறையின் வழக்கம். இதுபற்றி முழு விபரங்களும் தெரிந்த சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை வெளியில் விட்டு வைத்திருப்பது தடயங்களை அழிப்பதற்காக இல்லாமல் வேற எதற்காக இருக்க முடியும். அனைத்து கட்சிகள், சமூக ஆர்வலர்கள், காவல்துறையின் பல்வேறு உயர் அதிகாரிகள், பொதுமக்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆகிய எல்லோருமே சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமென்று வற்புறுத்தியும் கைது செய்யவிடாமல் தடுக்கின்ற அந்த உச்சகட்ட அதிகாரம் படைத்தவர்கள் யார்?
காவல்துறை அதிகாரிகள் ஆட்சியில் இருப்பவர்கள் என்ன சொன்னாலும் அதை செய்யக் கூடியவர்களாக மாறிப்போய் இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்களுடைய இடமாறுதல்களாக இருந்தாலும், பதவி உயர்வாக இருந்தாலும் அதிகாரம் படைத்த ஆளுங்கட்சிகாரர்களை நம்பிதான் இருக்கிறது. அதிகாரிகளுடைய தனிப்பட்ட குணங்களை வைத்து இதில் கொஞ்சம் மாறுபாடும் உண்டு. ஆளுங்கட்சிக்கு ஒத்துப்போகாத அதிகாரிகள் எந்த அதிகாரமும், உபயோகமும் இல்லாத பொறுப்புகளில் நியமிக்கப்படுகிறார்கள். ஒரு சில அதிகாரிகள் அதிகார மையத்திற்கு தலையாட்டுபவர்களாக இருந்தாலும் சில சட்ட சிக்கல்களை எடுத்துச்சொல்லி தவறுகள் நடக்காமல் தடுக்கிறார்கள்.
ஆனால் ஒரு சில அதிகாரிகள் தவறு என்று தெரிந்தும் ஆட்சியாளர்கள் சொல்வதை அப்படியே கேட்கிறார்கள். சாத்தான்குளம் உயிரிழப்புகள் விசாரணையை அதிகாரிகளோடு நிறுத்திக் கொள்ளாமல் இவ்வளவு தைரியத்தை கொடுத்து இன்று காப்பாற்ற துடிக்கின்ற அதிகார மையம் யார் என்ற கோணத்திலும் விசாரணை நடத்த வேண்டும். தமிழக அரசு காவல்துறையை கை பொம்மையாக எப்படி பயன்படுத்துகிறது என்பதற்கான உதாரணங்கள் உள்ளன. 
நடந்த நடப்புகளை பார்க்கும்போது சாத்தான்குளம் இரட்டை கொலை ஆட்சியாளர்களுடைய ஆதரவு இல்லாமல், அறிவுறுத்தல் இல்லாமல் காவல்துறை அதிகாரிகள் மட்டுமே செய்திருக்கிறார்கள் என்பதை நம்ப முடியவில்லை. பிரேத பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பாகவே தமிழக முதல்வர் இருவரும் உடல் உபாதைகளால் இறந்தார்கள் என்று பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொலைக்கான முகாந்திரம் இருக்கிறது என்று நீதிமன்றம் முடிவு செய்த பின்னால் முதல்வரின் நிலைப்பாடு என்ன? தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இல்லாமல் சாத்தான்குளம் காவல்நிலையத்தை வரலாற்றிலேயே முதல்முறையாக வருவாய்த்துறையிடம் ஒப்படைத்ததற்கு தமிழக அரசினுடைய பதில் என்ன? சாத்தான்குளம் போன்ற நிகழ்வுகள் திரும்ப நடக்க கூடாது என்பதற்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?
தமிழகத்தில் சாமானிய மக்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் வரை பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது என்பது நடக்கிற நிகழ்வுகளில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. இது சட்டத்தின் ஆட்சியிலிருந்து சர்வதிகார ஆட்சியை நோக்கி பயணிக்கிற பாதையாக மாறி இருக்கிறது. 1991 லிருந்து 96 வரை நடந்த அதிமுக ஆட்சியை இது நினைவுபடுத்துகிறது. பதிலடி கொடுக்க 1996-ஆம் ஆண்டை போல பொதுமக்கள் தயாராக வேண்டும்.” என்று அறிக்கையில் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.