சயன் & வாளயார் மனோஜ்! - தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க.வை அதிர வைத்துக் கொண்டிருக்கும் பெயர்கள் இவை இரண்டும்தான்.

கடந்த 2017ம் ஆண்டு ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளைகள் பின் அதைத் தொடந்து நிகழ்ந்த 3 விபத்து மரணங்கள் மற்றும் ஒரு தற்கொலை ஆகியவற்றில் தமிழக முதல்வரான எடப்பாடியாரின் பெயரை இழுத்துவிட்டு தேசத்தையே அதிர வைத்துக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள். 

இத்தனைக்கும் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களின் மிக முக்கிய குற்றவாளிகளே இவர்கள் இருவரும்தான் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். சயன் மற்றும் வாளையார் மனோஜ் இருவரையும் பேச வைத்து, அதை ஒரு ஆவணப்படமாக்கி தெகல்ஹாவின் மாஜி எடிட்டர் மேத்யூ சாமுவேல் வெளியிட்ட வீடியோதான் தேசிய அரசியலரங்கில் டிரெண்டிங். 

தன் மீதான குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்திருக்கிறார் முதல்வர் பழனிசாமி. வீடியோவில் சயன் மற்றும் மனோஜ் இருவரும் குறிப்பிடும் விஷயங்களில் உள்ள முரண்பாடுகள் உள்ளிட்டவற்றை வைத்து இது ஒரு ஜோடிக்கப்பட்ட புகார் என்று முதல்வருக்காக வழக்கறிஞர்கள் குழு தீவிரமாக பேசி வருகிறது. இருவரின் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. அதன்படி சயன் மற்றும் மனோஜ் இருவருமே தமிழக முதல்வர் எடப்பாடியாரின் எதிரிகளே. 

டெல்லியில் இருந்த இவர்களை கைது செய்து கொண்டு வந்த தமிழக காவல்துறையால் அவர்களை சிறையில் அடைக்க முடியவில்லை. காரணம், மாஜிஸ்திரேட் மறுத்ததுதான். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இருவருக்கும் வழங்கப்பட்டிருக்கும் ஜாமீனை ரத்து செய்ய சொல்லி தமிழக போலீஸ் கோரியிருப்பதை உதகமண்டலம் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுவிட்டது என்பதே தகவல். 

இந்நிலையில், அடிப்படையில் கேரளாவை சேர்ந்த இந்த இருவரும் இப்போது அந்த மாநிலத்தில்தான் இருக்கிறார்கள். இவர்களின்  உயிருக்கு ஆபத்து இருப்பதாக சொல்லும் மேத்யூ சாமுவேல், “தமிழக போலீஸார், இவர்கள் விவகாரத்தில் சட்ட விரோதமான செயல்களை செய்ய திட்டமிட்டு வருகிறார்கள். இந்த சூழலில், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதினேன். திருச்சூரில் உள்ள அவர்கள் இரண்டு பேரின் குடும்பத்துக்கும் உரிய பாதுகாப்பு கொடுப்பதாக கேரள அரசு பதில் சொல்லியுள்ளது.” என்றிருக்கிறார். 

கேரள அரசின் முடிவாக வெளியாகி இருக்கும் இந்த தகவல்தான் அதிர வைக்கிறது. பினராயி இப்படியொரு முடிவை எடுத்துள்ளாரா? என்று அ.தி.மு.க. சீனியர்கள் சந்தேகிக்கும் அதேவேளையில், ‘குற்றவாளிகளே ஆனாலும் அவர்களின் உயிருக்கு பாதுகாப்பு தரவேண்டியது சம்பந்தப்பட்ட அரசின் கடமை, இதை சட்டம் உத்தரவிடுகிறது. அதைத்தான் அம்மாநில முதல்வர் செய்கிறார். நாம் சட்ட ரீதியாக சென்று இருவரையும் கைது செய்து கொண்டு வந்து முறைப்படி விசாரிக்கலாம்.” என்று சட்ட வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். 

இருந்தாலும் தமிழக முதல்வர் எடப்பாடியாரின் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டை பொழிந்தவர்களை கேரள அரசு பாதுகாப்பாக வைத்துள்ளதில் உள் அரசியல் இருக்கிறது! என்று அரசியல் விமர்சகர்கள் கிளப்பிவிட துவங்கியுள்ளனர். ஆனாலும் இரு மாநில முதல்வர்களும் இது குறித்து வெளிப்படையாக வாய் திறக்கவில்லை! என்பதை கவனிக்க வேண்டும். ஷ்....முடியலப்பா!