முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைப்புக்குப் பிறகு தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் இணைப்பால், கடும் கோபத்துக்கு ஆளானார்கள் டிடிவி தரப்பினர். தற்போது டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் புதுச்சேரியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி புதுச்சேரிக்கு வருகை தந்தார். அப்போது பேசிய அவர், சபாநாயகருக்குத்தான் அதிகாரம் உள்ளது என்று தவறாக கூறுகின்றனர்.

உண்மையில் அவருக்கு சஸ்பெண்ட் செய்யும் அதிகாரம் மட்டுமே இருக்கிறதே தவிர, தகுதி நீக்கம் செய்ய அதிகாரம் இல்லை. நாங்கள் ஏற்கனவே ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் புகார் தெரிவித்துள்ளோம்.

நாங்கள் பேரவைத் தலைவரை மதிக்கிறோம். அதே நேரத்தில், அரசு கொறடா தரும் புகார்களுக்கு எல்லாம் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது தவறானது. சட்ட வல்லுநர்களிடம் கேட்டு அவர் செயல்பட்டிருக்கலாம். அதிகார வரம்பு தெரியாமல் செயல்பட்டிருக்கிறார்.

ஜெயலலிதா மூலம் அமைந்த அதிமுக ஆட்சிக்கு எதிராக ஓ.பி.எஸ். அணி வாக்களித்தது. அப்படி வாக்களித்த 11 பேர் மீது நோட்டீஸ் தராதது ஏன்? அவர்களை தகுதி நீக்கம் செய்யாதது ஏன்? இது தொடர்பாக மாஃபா பாண்டியராஜன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் தொடர்பாக டிடிவி தினகரன் நீதிமன்றம் செல்ல உள்ளார். தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் எடப்பாடி, தினகரனிடம் பேச வேண்டும்.

கட்சிக்கு துரோகம் செய்த ஓ.பி.எஸ்சை ஏற்க முடியாது. நடிகர் கமலுக்கு பயந்து செல்போனை ஆஃப் செய்வது, இ-மெயில் முகவரியை மூடுவது போன்ற செயல்களை அமைச்சர்கள் ஏன் செய்கின்றனர். பதவிக்காக முட்டாள்தனமாக செயல்பட வேண்டாம். ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள இறங்கித்தான் வர வேண்டும்.

டிடிவி தினகரனை கைது செய்தாலும், அவர் தனியாக சிறை செல்ல மாட்டார் என்பதை உணர வேண்டும். பாஜகவுக்கு நாங்கள் எதிரி இல்லை என்பதையும் உணர வேண்டும். ஓ.பி.எஸ்சை ஒருபோதும் ஏற்க மாட்டோம். முதலமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி கண்டிப்பாக இறங்க வேண்டும்.

ஓ.பி.எஸ். மீண்டும் முதலமைச்சராக சசிகலாதான் காரணம். ஆனால், அவர் முதுகில் குத்திவிட்டார். அதனால் அவரை துணை முதலமைச்சராக ஏற்க மாட்டோம்.