வீடுகளில் குடியிருந்தவர்கள் மேல் மாடியில் உட்கார்ந்துகொண்டு உணவிற்காக ஏங்கியதை நாட்டு மக்கள் இன்னும் மறக்கவில்லை. இதையெல்லாம் மனதில் கொண்டுதான், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை ஆட்சியில் மக்கள் அமர்த்தினார்கள்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்விக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு , வெறும் அறிவிப்புகளாக மட்டுமே உள்ளது. வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர் , டிசம்பர் மாதங்களிலே பெய்யும். இது அனைவருக்கும் தெரிந்த பருவகாலநிலையாகும். இந்த ஆண்டு வட கிழக்கு பருவ மழை தொடக்கத்திலே சென்னை மாநகர் கடல் போல் காட்சியளிக்கிறது. மழை வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும். 2 நாட்கள் பெய்த தொடர் மழையால் சென்னை நகரமே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதில் தமிழக அரசு கோட்டை விட்டுள்ளது என விமர்சனம் செய்திருந்தார். 

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உறக்கத்தில் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே பேட்டி அளித்துள்ளார். வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழக முதல்வர் 4 முறை அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து உரிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 5 மாத காலத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி மிகப்பெரிய அளவில் தூர் வாரியதன் விளைவாக சாலைகளில் மழை நீர் தேங்கும் அவலம் குறைந்துள்ளது. தாழ்வான இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை, மாநகராட்சி அதிகாரிகள், அதிக திறன் கொண்ட மோட்டார் பம்புகளின் உதவியுடன் வெளியேற்றி வருகின்றனர்.

தமிழக முதல்வர், பருவமழை குறித்து நடத்திய ஆய்வுக் கூட்டம் செயல் வடிவம் பெறவில்லை என்று உதயகுமார் பேட்டி அளித்துள்ளார். ஆய்வுக் கூட்டம் நடந்து முடிந்த உடனேயே எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தேர்தலுக்கு முன்பாகத் தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களையும் இன்றைக்குச் செயலாக்கம் செய்துகொண்டு வரும் முதல்வர் நமது தமிழக முதல்வர். மறைந்த ஜெயலலிதா அம்மையார் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்புகளைப் போல் செயல் வடிவம் பெறாமல் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு பேச வேண்டாம்.

சென்னை எழிலகத்திலுள்ள பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலகத்தில் உள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்திற்கு தமிழக முதல்வர் 7.11.2021 அன்று வருகை புரிந்து ஆய்வு செய்து உரிய ஆலோசனைகளை வழங்கியதைக் கூடத் தெரியாமல் பேட்டி அளித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும், 15 ஐஏஎஸ்., அதிகாரிகளை உடனடியாக நியமித்து பணிகளை முடுக்கிவிட்டு இருக்கின்றார் நமது முதல்வர். 2015ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்து விட்டு ஏற்படுத்திய பாதிப்பைப் போல் இல்லாமல், இந்த ஏரியைக் கண்காணித்து சரியான அளவில் மழை நீரை வெளியேற்றுவதற்கு ஒரு உயர்நிலைக் கண்காணிப்புக் குழுவை (Expert Committee) தமிழக முதல்வர் ஏற்படுத்தியுள்ளார். உங்கள் ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விட்டதினால் ஏற்பட்ட பாதிப்புகளை சென்னை மக்கள் மட்டுமல்லாமல், தமிழக மக்கள் முழுவதும் இன்னும் மறக்கவில்லை.

தமிழக முதல்வர் உத்தரவின்படி, அமைச்சர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்ட இடங்களை மேற்பார்வையிட்டு உணவு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோய்கள் பற்றி உதயகுமார் கேள்வியாகக் கேட்டுள்ளார். முதலமைச்சராகப் பதவியேற்ற 5 மாத காலத்திற்குள்ளேயே கொரோனா பெருந்தொற்றினைக் கட்டுப்படுத்திய முதல்வர் நமது தமிழக முதல்வர். அறிவியல் யுகத்தில் வடகிழக்குப் பருவமழை பற்றி அரசு கணிக்கத் தவறிவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார் உதயகுமார்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கிய 26.10.2021 அன்று முதல் இன்று வரை இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புக்கேற்ப தகுந்த நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகின்றோம். அறிவியலில் அதிக நாட்டம் கொண்ட அவர்களது ஆட்சியில் மழை மற்றும் புயல் காரணமாக சென்னை மாநகராட்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் மக்கள் பட்ட சிரமங்கள் குறிப்பாக 10 நாட்கள் மின்சாரம் வசதியின்றி மக்கள் பட்ட அல்லல்களை நாடு இன்னும் மறக்கவில்லை.

வீடுகளில் குடியிருந்தவர்கள் மேல் மாடியில் உட்கார்ந்துகொண்டு உணவிற்காக ஏங்கியதை நாட்டு மக்கள் இன்னும் மறக்கவில்லை. இதையெல்லாம் மனதில் கொண்டுதான், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை ஆட்சியில் மக்கள் அமர்த்தினார்கள். 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊராட்சித் தேர்தலில் திமுகவுக்கு வெற்றியையும், அதிமுகவிற்குத் தோல்வியையும் அளித்துள்ளார்கள். எனவே, இனியாவது உதயகுமார் களச் சூழ்நிலையை அறிந்துகொண்டு பேட்டி அளிக்க வேண்டுமென்று அறிவுறுத்துகிறேன் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.