செங்கல்பட்டு அருகே பாஜகவை சேர்ந்த குஷ்பு சென்ற கார் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிஷ்டவசமாக குஷ்பு உயிர் தப்பினார். 

கருணாநிதி திமுக தலைவராக இருந்தபோது அவருடைய அன்புக்கு உரியவராக வலம் வந்த நடிகை குஷ்பு, ஒரு கட்டத்தில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதாக திமுக உடன் பிறப்புகளின் கோபத்திற்கு உள்ளானார். தொடர்ந்து அக்கட்சியில் இருந்து விலகிய குஷ்பு காங்கிரஸ் கட்சியின் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர், காங்கிரஸில் ஓரங்கட்டப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்னர் வெளியேறி குஷ்பு பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில், பாஜகவை சேர்ந்த குஷ்பு வேல் யாத்திரைக்காக கடலூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, கார் செங்கல்பட்டு அடுத்த மதுராந்தகம் அருகே சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக முன்னாள் சென்ற கண்டெய்னர் லாரி மீது குஷ்பு சென்ற கார் மோதியது. இதில், காரின் பின்பக்க கதவு மட்டும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் நடிகை குஷ்பு அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.