திமுக கூட்டணியில் எந்த தொகுதியில் ஐயூஎம்எல் போட்டி.? தொகுதியின் பெயரை வெளியிட்ட காதர் மொய்தீன்
நாடாளுமன்ற தேர்தலில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மீண்டும் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்போம் அது கிடைக்கவில்லையென்றால் திருச்சி தொகுதியில் போட்டியிடுவோம் என காதர்மொய்தீன் தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற தேர்தல் - தொகுதி பங்கீடு
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில் திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எந்த, எந்த தொகுதிகள் ஒதுக்க்ப்படும் என்ற கேள்வியானது எழுந்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த கட்சிகளுக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட தொகுதிகளே ஒதுக்கப்படுமா அல்லது வேறு தொகுதி மாற்றி கொடுப்படுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில தலைவராக காதர் மொய்தீன் தேர்வு செய்யப்பட்டார்.
எந்த தொகுதியில் ஐயூஎம்எல் போட்டி
ஏற்கனவே தேசிய தலைவராக உள்ள நிலையில், இன்று மாநில தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். பொதுச் செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ அபூபக்கர் தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காதர் மொய்தீன், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த முறை ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம். இந்த முறையும் ராமநாதபுரம் தொகுதி கேட்போம் அது கிடைக்கவில்லையென்றால் மாற்று தொகுதியாக திருச்சியை கேட்டுப்பெறுவோம் என கூறினார். தமிழகத்தில் அதிமுக பா.ஜ.க கூட்டணி முறிவு என்பது ஒரு நாடகம் என தெரிவித்தவர், இதனை மக்கள் நம்ப மாட்டார்கள் என கூறினார். இஸ்லாமிய சமூக வாக்குகள் ஒருபோதும் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு செல்லாது எனவும் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்