கேரளாவில் கொரோனா வைரஸ் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் மாத 20 ஆம் தேதிக்கு பிறகு ஒரு சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார் .  உலக அளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது இந்தியாவில் 13, 495 பேருக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ளது .  448 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் .  1, 776 பேர் மருத்துவமனையில்  சிகிச்சைபெற்று  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இந்நிலையில் நாட்டிலேயே  மகாராஷ்டிரா கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக உள்ளது.  நாளுக்குநாள் அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  அங்கு இதுவரை 1805 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

 டெல்லியில் 1640 பேரும் ,  தமிழகத்தில் 1,267 பெரும் ,  ராஜஸ்தானில் 1,531 பேரும் ,  மத்திய பிரதேசத்தில் 1,120 பேரும்,  குஜராத்தில் 930 பேரும் ,  உத்திரபிரதேசத்தில் 805 பேரும் ,  தெலங்கானாவில் 700 பேரும் ,  ஆந்திராவில் 534 பேரும் ,  கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் .  இந்நிலையில் கேரளாவில்  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 395 ஆக உயர்ந்துள்ளது.  கர்நாடகாவில் 315 பேரும்  காஷ்மீரில் 314 பேரும் மேற்கு வங்கத்தில் 252 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். ஆனால்  இந்தியாவிலேயே முதன் முதலாக கொரோனாவால்  பாதிக்கப்பட்ட மாநிலம் எது என்றால் அது கேரளாதான்.   ஆரம்பத்தில் கேரளாவில் கேரளா வைரஸ் வேகமாக பரவியது ,  ஆனால் கேரளா மருத்துவர்களும் அம்மாநில சுகாதாரத்துறையும்  இந்த வைரஸை மிக தைரியமாகவும் சாதுர்யமாகவும் எதிர்த்து போராடினர்.

 

இந்த வைரசை கேரளத்தில் கட்டுபடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு போர்கால அடிப்படையில் எடுத்தது அதன் விளைவாக கொரோனா வைரஸ் இங்கு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது .  இதுவரை இங்கு வெறும் 395 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது . ஏற்கனவே வைரசால் பாதிக்கப்பட்டவர்களும்  வேகமாக  குணமடைந்து வருகின்றனர்  என அரசு தெரிவித்துள்ளது . இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் கொரோனா வைரஸ் கேரளாவில் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது .  

இந்நிலையில் மத்திய அரசின் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக அதாவது ஏப்ரல் 20 க்கு பிறகு ஒரு சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு  தளர்த்தப்படும் என தெரிவித்துள்ளார்.  மாவட்டங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் இயக்கப்படும் என்றும் பெண்களுக்கு வாகனம் ஓட்டுவதில் சலுகை வழங்கப்படும் என்றும் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார் . நாட்டிலேயே முதல் மாநிலமாக  கேரளா கொரோனாவை  எதிர்த்து  வெற்றி கண்டிருப்பது  மற்ற மாநிலங்களுக்கு புது நம்பிக்கையையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.