Asianet News TamilAsianet News Tamil

ஒரே இரவில் தமிழக உரிமையை அடித்து உடைத்த கேரள அமைச்சர்கள் ஓவர் அட்ராசிட்டி.. அலறும் சீமான்.

உச்சநீதிமன்ற வழிகாட்டல்படியே எல்லாம் நடைபெறுகிறது என அத்துமீறி அணையைத் திறந்த கேரள அமைச்சர்களின் செயலை நியாயப்படுத்தி திமுக அரசு சப்பைக்கட்டு கட்டுவது வெந்தப்புண்ணில் வேலைப்பாய்ச்சும் கொடுஞ்செயலாகும். 

Kerala ministers who broke the rights of Tamil Nadu in one night over atrocity .. screaming Seeman.
Author
Chennai, First Published Oct 30, 2021, 11:54 AM IST

உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த கொள்ளளவை எட்டுவதற்கு முன்பே, அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம், முல்லைப்பெரியாறு அணையில் உச்சநீதிமன்றம் நிர்ணயித்த கொள்ளளவை எட்டுவதற்கு முன்பே, அணையிலிருந்து தண்ணீரைத் திறந்து விடும் கேரள அமைச்சர்களின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. எவ்வித முன்னறிவிப்புமின்றி முல்லைப்பெரியாறு அணையின் நீரை வீணாகக் கடலில் கலக்கச்செய்து, பல்லாயிரக்கணக்கான தமிழக விவசாயிகளின் வயிற்றிலடித்துள்ள கேரள அரசின் அடாவடிச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

முல்லைப்பெரியாறு நிலப்பகுதியை தமிழர்கள், கேரளாவிடம் இழந்தபோதும், அணைப்பாதுகாப்பு மற்றும் நிர்வாகம் இன்றளவும் தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. நீர் திறப்புப்பணிகளை தமிழகப் பொதுப்பணித்துறைதான் மேற்கொள்கிறது. ஆனால், இதுவரை இல்லாத நடைமுறையாக கேரளா மாநிலத்தின் நீர்வளத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் ஆகியோர் அத்துமீறி முல்லைப்பெரியாறு அணையை வலுக்கட்டாயமாகத் திறந்திருப்பது தமிழ்நாட்டின் இறையாண்மை மீது தொடுக்கப்பட்டத் தாக்குதலேயாகும். கேரள அரசின் இத்தகைய அத்துமீறலைத் தடுத்து நிறுத்தாது, கேரளாவின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்ததோடு, அதனை நியாயப்படுத்த முயலும் தமிழ்நாடு அரசின் செயல் வெட்கக்கேடானது. 

Kerala ministers who broke the rights of Tamil Nadu in one night over atrocity .. screaming Seeman.

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தியதென்பது பல ஆண்டுகள் காத்திருந்து பல்வேறு தடைகளைத் தாண்டி, பொறியியல் வல்லுநர்களின் பல்வேறு கட்ட ஆய்வுகள் மூலம் அணை வலுவாக உள்ளது என்று நிறுவி, கடுமையான சட்டப்போராட்டம் செய்ததன் விளைவாகக் கிடைத்த வாழ்வாதார உரிமையாகும். அதுமட்டுமின்றி, அணையின் நீர்மட்டத்தை 142 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முல்லைப்பெரியாறு பாசனப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால், கேரள அரசோ அதற்கு நேர்மாறாக நீர்மட்டத்தை 136 அடியாகவே குறைக்கப் பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்து வருகிறது. ஒவ்வொரு முறையும் அணை 136 அடியைத் தாண்டும்போதெல்லாம் அணை உடையப்போகிறது என்ற வதந்தியைத் திட்டமிட்டுப் பரப்பிக் கேரள மக்களிடம் தேவையற்றப் பதற்றத்தை ஏற்படுத்துவதோடு, பின்பு அதனைக் காரணம் காட்டியே அணையை உடைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அம்மாநில அரசு முன் வைக்கிறது. 

அதன், ஒரு பகுதியாகவே தற்போது 139 அடியைத் தாண்டினால் அணை உடைந்துவிடும் எனும் வாதத்தை முன்வைத்து தேவையற்ற ஒரு வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ளது கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட் அரசு. அணையின் உண்மையான முழுக்கொள்ளளவு 152 அடியாகும். உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ள கொள்ளளவு 142 அடி. ஆனால், தற்போதைய அணையின் நீர்மட்டம் 139 அடியைக்கூடத் தொடவில்லை எனும்போது உபரிநீர் எங்கிருந்து வந்தது? முதல்நாள் உச்சநீதிமன்றத்தில் கேரளாவின் வாதத்தை ஏற்க மறுத்து, அப்பகுதியில் மழை பெய்யவில்லை என்பதால் அணையின் நீர்மட்டத்தைக் குறைக்கத் தேவையில்லை எனும் வாதம் வைத்த தமிழ்நாடு அரசு, மறுநாள் அத்துமீறி அணையைத் திறந்த கேரள அமைச்சர்களது செயலைத் தடுத்து நிறுத்தாது வேடிக்கைப் பார்த்தது ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும். உச்சநீதிமன்றமே நவம்பர் 11 வரை அணையின் நீர்மட்டத்தை 139.5 அடி வரையில் சேமிக்கலாம் என உத்தரவிட்ட நிலையில், அதை எட்டும் முன்பாகவே அணையிலிருந்து நீர்திறப்பதை தமிழ்நாடு அரசு எவ்வாறு அனுமதித்தது? 

Kerala ministers who broke the rights of Tamil Nadu in one night over atrocity .. screaming Seeman.

அணைப்பராமரிப்பு உரிமை இன்னும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும்போது நீர்த்திறப்பின்போது தமிழகத்தின் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர், தேனி மாவட்ட அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் தமிழ்நாடு அரசு சார்பில் பங்கேற்காதது ஏன்? கேரளா அமைச்சர்களின் அத்துமீறலை உடனடியாக உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, சட்டத்தின் துணையுடன் கேரள அரசின் வஞ்சகச் செயலை முறியடித்திருக்க வேண்டிய திமுக அரசு, அதனைச் செய்யத்தவறியது அரசின் நிர்வாகத்திறமையின்மையையும், அலட்சியப்போக்கையுமே வெளிக்காட்டுகிறது. மேலும், உச்சநீதிமன்ற வழிகாட்டல்படியே எல்லாம் நடைபெறுகிறது என அத்துமீறி அணையைத் திறந்த கேரள அமைச்சர்களின் செயலை நியாயப்படுத்தி திமுக அரசு சப்பைக்கட்டு கட்டுவது வெந்தப்புண்ணில் வேலைப்பாய்ச்சும் கொடுஞ்செயலாகும். எதிர்காலத்தில் இதனைக் காரணம் காட்டியே, அணையின் நீர் மட்டம் 136 அடியைத் தாண்டாதவாறு கேரள அரசு முட்டுக்கட்டை இடுவதற்கு வாய்ப்பளித்துள்ளதன் மூலம், பல ஆண்டுகள் போராடிப்பெற்ற உரிமையினை ஒரே இரவில் ஒட்டுமொத்தமாகத் தாரை வார்த்துள்ளது திமுக அரசு.

ஆகவே, இனியாவது திமுக அரசு விழித்துக்கொண்டு, உபரி நீர் என்ற பெயரில், முல்லைப்பெரியாற்றுப் பாசன நீரினைத் தேவையில்லாமல் கடலில் கலக்கச் செய்வதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், கேரளாவின் அத்துமீறலை உடனடியாக உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுசென்று சட்டப்போராட்டம் நடத்தி, இழந்த முல்லைப்பெரியாற்று உரிமையை நிலைநாட்ட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios