Asianet News TamilAsianet News Tamil

கொரோனா கொடூரத்திற்கு மத்தியில் கேரளாவின் கேடுகெட்ட காரியம்..!! தலையில் அடித்துக் கதறும் சீமான்..!!

தற்போது வறட்சி காலங்களில் கைகொடுக்கும் மற்றொரு பழைய குழாயையும் மூடினால் கோவை மக்கள் கோடை காலங்களில் குடிநீர் பற்றாக் குறையினால் திண்டாடும் நிலை ஏற்படும்

kerala decided to block water pipe line to tamilnadu
Author
Chennai, First Published May 30, 2020, 12:25 PM IST

கோவையின் முக்கிய நீர் ஆதாரமான சிறுவாணி ஆற்றின் பாரிய பழைய குடிநீர் குழாயினை மூடும் கேரள அரசின் நடவடிக்கைளை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:-  கொங்கு மண்ணில் பாயும் சிறுவாணி ஆற்று அணை  மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அணையில் 50 அடி வரை நீர் தேக்க முடியும், இதில் இருந்து கோவைக்கு நாள்தோறும் 70 எம். எல்.டி குடிநீர் எடுக்கப்படுகிறது. மேலும் சாடிவயல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கோவை வரை உள்ள 22 கிராமங்களுக்கு இந்த நீர் பகிர்ந்தளிப்பதுடன் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளும் பிரதான குடிநீராக சிறுவாணி ஆற்றுநீரை நம்பியே உள்ளது. கடந்த ஆண்டு கனமழை பெய்தபோது சாடிவயல் மற்றும் மன்னார் காடு வழியாகச் சிறுவாணி அணைக்கு வரும் சாலையும் நிலச்சரிவால் துண்டிக்கப்பட்டது. இதையடுத்துத் தமிழகக் குடிநீர் வடிகால் வாரியத்தின் அதிகாரிகள் அணைக்குச் செல்ல முடியாத சூழல் உருவாகியது. 

kerala decided to block water pipe line to tamilnadu

இதைப் பயன்படுத்தி சிறுவாணி அணை நிரம்பும் நிலையில் இருந்தபோதும் பாதுகாப்புக் காரணங்களைக் கூறி கேரள நீர்ப்பாசனத் துறையினர் தண்ணீரை வெளியேற்றினர்.இந்நிலையில் தற்போது சிறுவாணி அணைக்குச் செல்லும் கேரள வனப்பகுதியில் சாலைகளைச் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அதே வேளையில் அணையின் நீர்மட்டம் 8.5 அடியாகக் குறைந்து உள்ளதால் நான்கு குழாய்களில் மூன்றாவது குழாய் வெளியே தெரிகிறது. மேலும் அப்பகுதியிலிருந்து 200 மீட்டர் தொலைவில் நிரந்தர நீர் இருப்புப் பகுதியில் உள்ள பழைய குழாயினைத் தமிழக அதிகாரிகளுக்குத் தெரியாமல் கேரள நீர்பாசன அதிகாரிகள் மூடி வருவதாகத் தகவல் வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தமிழகக் குடிநீர் வாரிய அதிகாரிகள் அணைக்குச் செல்ல இயலாத சூழலை பயன்படுத்தி இந்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இது குறித்த தகவல் அறிந்த தமிழகக் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் சாடிவயல் வழியாக சிறுவாணி அணைக்குச் சென்றபோது , கேரள வனத்துறையினர் கேரள பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அனுமதியில்லாமல் உள்ளே அனுமதிக்க முடியாது எனக் கூறி திருப்பி அனுப்பி உள்ளனர். மேலும் பழைய குழாயை மூடும் பணியும் வேகமாக நடைபெற்று வருவதையும் தமிழக அதிகாரிகள் கண்டுள்ளனர். 

kerala decided to block water pipe line to tamilnadu

சிறுவாணி அணையில் எந்த ஒரு பராமரிப்பு பணிகளை மேற்கொண்டாலும் தமிழகக் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் மேற்கொள்ளக் கூடாது என்பது இருமாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்த விதி. சிறுவாணி அணையின் பராமரிப்புப் பணிகளுக்கான செலவினங்களையும் தமிழகம்தான் கொடுக்கின்றது. கொரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த 60 நாட்களாக அணைக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் பராமரிப்புப் பணிகள் அல்லது வேறு எந்தப் பணிகளும் தங்களுக்குத் தெரியாமல் மேற்கொள்ளக்கூடாது எனக் கேரள நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளிடம் தமிழக அதிகாரிகள் வலியுறுத்தியதையும் மீறி தற்போது இந்தப் பழைய குழாயை அடைத்து வருவதாக தெரியவருகிறது. தற்போது கேரள அதிகாரிகளால் வேகவேகமாக மூடப்படும் பழைய குழாய்தான் வறட்சி காலங்களில் கோவையின் குடிநீர் தேவைக்குக் கைகொடுக்கும் நிலையில் இருந்து வந்தது. இந்தக் குழாய் மூலமாகப் போதுமான குடிநீர் எடுத்து வந்த நிலையில் இந்தப் பழைய குழாயை அடைத்தால் கோவைக்கு வரும் குடிநீரின் அளவு குறையும். 

kerala decided to block water pipe line to tamilnadu

கடந்த 2014ம் ஆண்டுக் கோவைக்குக் குடிநீர் வரக்கூடிய இதேபோன்ற பழைய குழாய் ஒன்றை நன்றாகச் செயல்பாட்டில் இருக்கும்போதே ஏற்கனவே கேரள அரசு மூடியதும் அதனால் கோவைக்கும் வரும் குடிநீர்வரத்து பாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தற்போது வறட்சி காலங்களில் கைகொடுக்கும் மற்றொரு பழைய குழாயையும் மூடினால் கோவை மக்கள் கோடை காலங்களில் குடிநீர் பற்றாக் குறையினால் திண்டாடும் நிலை ஏற்படும். எனவே தமிழக அரசு உடனடியாகக் கேரள அரசுடன் பேசி கோவை மண்ணின் குடிநீர் தேவையைப் பூர்த்திச் செய்வதில் உயிர்நாடியாக விளங்கும் சிறுவாணி ஆற்றின் குடிநீர் குழாய்களை மூடும் முயற்சியைத் தடுத்து நிறுத்திட வேண்டும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios