கேரளாவின் ஆலத்தூர் தனித்தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரம்யா ஹரிதாஸ்.குன்னமங்கலம் பஞ்சாயத்து தலைவியாக இருந்த ரம்யா ஹரிதாஸ், காங்கிரஸ் கட்சியின் தாழ்த்தப்பட்டோர் பிரிவின் நிர்வாகியாக இருந்தார். சினிமாவில் நாட்டுப்புற பாடல்கள் பாடி பிரபலம் ஆனார்.

பார்ப்பதற்கும், பழகுவதற்கும் இனிமையானவர். ஆலத்தூர் மக்கள் இவரை தங்களின் குட்டி சகோதரி என்று அன்புடன் அழைத்தனர். கிராமப்புற மக்களை சந்திக்கும் போது, அவர்களோடு அமர்ந்து உணவு உண்பதும், குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்வதும் உண்டு.

எம்.பி. ஆன பின்பும் ரம்யா ஹரிதாஸ் தனது வழக்கமான செயல்களை மாற்றிக்கொள்ளவில்லை. எம்.பி. ஆவதற்கு முன்பு வீட்டிலும், வெளியிலும் எப்படி நடந்து கொண்டாரோ அப்படியே இப்போதும் நடந்து கொள்கிறார்.

ஓய்வு கிடைக்கும் நேரங்களில் வயல்வெளிக்குச் சென்று நாற்று நடும் பணியிலும் ஈடுபட்டார். தற்போது  ரம்யா ஹரிதாஸ் வயலில் நாற்று நடும் வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வெளியானது. இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களில் ஏராளமானோரால் பார்க்கப்பட்டு, பரப்பபட்டது.

ரம்யா ஹரிதாஸ் இப்போதும் எளிமையாக இருக்கிறார், பழையதை மறக்கவில்லை, குறிப்பாக விவசாயத்தின் மாண்பை புரிந்து கொண்டு நாற்று நடும் காட்சி விவசாயிகளுக்கு பெருமை.

இவரை போல மற்ற எம்.பி.க்களும் விவசாயத்தையும், விவசாயிகளையும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும், என பலரும் சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.
ரம்யா ஹரிதாஸ் கேரளாவின் 2-வது தலித் பெண் எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது.