கேரளா உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை வேகமாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வரும் நிலையில், காலை 11 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 941 பஞ்சாயத்துகளில் 443 இடங்களில் இடதுசாரி ஜனநாயக முன்னணி முன்னிலை பெற்று வெற்றி முகத்தில் உள்ளது. இது கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றுவோம் என கூறிவந்த பாஜக இதுவரை வெறும் 33 பஞ்சாயத்துகளில் மட்டுமே முன்னிலை பெற்று கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

கேரள மாநிலத்தில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சி  தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி என  மும்முனைபோட்டி நிலவியது. மொத்தம் 941 கிராம ஊராட்சி, 152 ஊராட்சி ஒன்றியம், 14 மாவட்ட ஊராட்சி, 86 நகராட்சி, 6 மாநகராட்சி என 1199 உள்ளாட்சி  அமைப்புகளின் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கான வாக்குபதிவு கடந்த 8, 10, 14 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. இதில் சராசரியாக 77 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டுவருகிறது. 

இதில் வெற்றிபெற்று புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பிரதிநிதிகள் டிசம்பர் 21ஆம் தேதி பதவியேற்றுக் கொள்வார்கள் என  மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது, முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணபட்டது, அதில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முன்னிலை பெற்றது. அதைத்தொடர்ந்து மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. அதில்  காலை 11 மணி நிலவரப்படி 941 பஞ்சாயத்துகளில் 422 இடங்களில் இடதுசாரி முன்னணி முன்னணியில் உள்ளது. அதேபோல் 344 பஞ்சாயத்துக்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. 

இதில் வரும் 33 பஞ்சாயத்துகளில் மட்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது, இதனால் பாஜக மூன்றாவது இடத்திற்கு  தள்ளப்பட்டுள்ளது, இது பாஜக தொண்டர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் சில மாதங் களில் கேரள சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அதன் முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. இதில் பாஜக வெறும் 33 இடங்களை கைப்பற்றி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது பாஜக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது