Kerala adgp daughter beat police driver
கேரள மாநிலத்தில் ஜீப்பை லேட்டாக கொண்டு வந்த போலீஸ் டிரைவரை செல்போனால் தாக்கிய ஏடிஜிபி மகள் மீதுபோலசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருவனந்தபுரத்தில் ஆயுதப்படை பிரிவு ஏடிஜிபி.யாக இருப்பவர் சுதேஷ் குமார். இவரது அலுவலக கார் டிரைவராக கவாஸ்கர் கடந்த 3 மாதங்களுக்கு முன் பணியில் சேர்ந்தார். இந்நிலையில், சுதேஷின் மனைவியும், மகள் ஸ்னிக்தா குமாரும் நடைப்பயிற்சிக்காக காரில் சென்றனர்.
அங்கிருந்து வீடு திரும்பும்போது, கவாஸ்கர் ஜீப்பைக் கொண்டு வர தாமதமானதால் ஸ்னிக்தா அவரை கடுமையாக திட்டியுள்ளார். இதனால், தன்னால் ஜீப்பை ஓட்டமுடியாது என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த ஸ்னிக்தா, தனது செல்போனால் கவாஸ்கரின் கழுத்து பின்பகுதியில் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த நிலையில், கவாஸ்கர் ஜீப்பை ஓட்டி சென்று அவர்களை வீட்டில் விட்டு, போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து அவர் பேரூர்கடை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் கவாஸ்கரின் மனைவி ரேஸ்மா கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து ஏடிஜிபி மகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார். அந்த மனுவில், ஏ.டி.ஜி.பி. சுதேஷ்குமார் தனது நாயை குளிப்பாட்ட அடிக்கடி எனது கணவரை கட்டாயப்படுத்துவார என்றும், பல நேரங்களில் என் கணவர் நாயை குளிப்பாட்டினார். சில நேரங்களில் மறுத்துள்ளார். இதனால் ஏ.டி.ஜி.பி.க்கு எனது கணவர் மீது கோபம் ஏற்பட்டது. இது தவிரஅவரது மனைவி காய்கறி வாங்க அனுப்புவார். அவரது மகள் குப்பை கூளங்களை கூட்ட செய்வார். வேலைகளை செய்ய தவறினால் தகாத வார்த்தைகளில் குடும்பமே திட்டுவதாக என்னிடம் அடிக்கடி கூறி வருத்தப்படுவார் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்..

ரேஸ்மாவின் புகாரை பெற்றுக்கொண்ட முதுலமைச்சர் பினராயி விஜயன் , கேரளாவில் தற்போது சில விரும்ப தகாத சம்பவங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக இந்த சம்பவம் கேரளாவிற்கு பெரும் தலைகுனிவுவை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசு தயங்காது என்று அவர் உறுதியளித்தார்.இதைத் தொடர்ந்து ஸ்னிக்தா குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் ஏடிஜிபி சுதேஷ் குமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
