கீழடி ஆய்வுக்கு 5 ஏக்கர் நிலத்தை வழங்கிய முத்துலட்சுமி என்ற மூதாட்டியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். 

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிகளை காண்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் அப்பகுதிக்கு சென்றிருந்தார். அங்கு நடைபெற்று வரும் ஆய்வு பணிகள் குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் வைகோ கேட்டறிந்தார். அவருடன் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராசன் ஆகியோர் உடனிருந்தனர். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, கீழடியில் கண்டெடுக்கப்பட்ட 16 ஆயிரம் பொருட்களை கொண்ட ஆய்வின் மூலமாக, எழுத்தறிவு பெற்ற மக்கள் வாழ்ந்து உள்ளதை அறிய முடிகிறது எனக்கூறினார். கீழடி பகுதியில் சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், உலகின் முதல் நாகரிகம் தமிழர் நாகரிகம் மட்டுமே என்பதை உலகம் மக்கள் விரைவில் ஏற்றுக் கொள்வார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். 

பின்னர், ஆய்வுக்காக 5 ஏக்கர் தென்னந்தோப்பை கொடுத்த முத்துலட்சுமியை கட்சிக்காரர்கள் வைகோவிடம் அழைத்து வந்தனர். முத்துலட்சுமியை கண்டதும் எழுந்து நின்று வணங்கி வரவேற்ற வைகோ அவருக்கு பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக்கொண்டார். மேலும், இந்தக்காலத்தில் 5 ஏக்கர் நிலத்தை இப்படி அகழாய்வு செய்துகொள்ளுங்கள் என கொடுப்பதற்கு முதலில் மனம் வேண்டும் வைகோ முத்துலட்சுமியை புகழ்ந்து பேசினார்.