அமமுகவின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்தித்தார் என்றும் ஓபிஎஸ் என்னை சந்தித்தது எனது நிர்வாகிகள் அனைவருக்கும் தெரியும் என்று கூறியிருந்தார். மேலும், தன்னை ஓ.பி.எஸ். சந்தித்தபோது, தர்மயுத்தம் என்று கூறி நான் நடந்து கொண்டவிதம் தவறு என்று கூறி மன்னிப்பு கேட்டதாகவும், தினகரன் கூறியிருந்தார்.

தினகரனின் இந்த பேச்சுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தரக்குறைவான அரசியல் செய்வார் என்பதை தான் எதிர்பார்க்கவில்லை என்றும், பொய்க்கு மேல் பொய் சொல்லி வருகிறார் என்றும் அரசியல் நாகரீகம் தெரியாத அநாகரீகமானவர் என்றும் தினகரனை விமர்சித்திருந்தார். ஓ.பி.எஸ். தன்னை சந்தித்ததாக டிடிவி தினகரன் கூறியதற்கு, ஓ.பி.எஸ். தினகரன் அநாகரீகமானவர் என்று குற்றச்சாட்டு கூறியுள்ளார். 

மாறி மாறி குற்றச்சாட்டுக்களை இவர்கள் கூறி வரும் நிலையில், தொண்டர்கள் குழப்பமான நிலையில் இருந்து வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன் சந்திப்பு உறுதிபடுத்தியுள்ள நிலையில், கட்சிக்குள் அவரது நம்பகத்தன்மை கேள்விக்குரியதாகி உள்ளது. இந்த நிலையில், எம்.பி.கே.சி.பழனிசாமி, பேஸ்புக் பக்கத்தில், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு லைவாக பதிலளித்தார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அதிமுக எம்.பி கே.சி.பழனிசாமி பேசியதாவது: சசிகலா குடும்பத்திற்கு எதிராக பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியதால்தான் அவர் பின்னால் அதிமுகவினர் திரண்டார்கள். அப்பொது சசிகலாவை எதிர்த்ததில் முக்கியமாக கே.பி.முனுசாமி, மைத்ரேயன், பி.எச்.பாண்டியன், பொன்னையன், நத்தம் விசுவநாதன் இவர்களுடன் நானும் இருந்தேன். அனால் யாருக்கும் தகவல் சொல்லாமல் ரகசியமாகச் சென்று டி.டி.வி. தினகரனை இவர் சந்திக்கிறார் என்றால் எங்களையும் தொண்டர்களையும் பன்னீர்செல்வம் முட்டளாக்கி விட்டார். 

அரசியலில் நல்ல மனிதராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் இருக்க வேண்டும். ஆனால் யாரிடமும் சொல்லாமல் அவர் தினகரனைச் சந்தித்ததால் நமபகத்தன்மை கேள்விக்குள்ளாகி விட்டது. இச்சந்திப்பு தொடர்பாக பல கேள்விகளுக்கு இன்னும் பதில் சொல்லாமல் இருக்கிறார். என்ன பேசினார்கள்? யாருடைய வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது? இருவருக்கும் பொதுவான அந்த நண்பர் யார்? இதை எல்லாம் பார்க்கும்போது தினகரனும் - பன்னீர்செல்வமும் எங்களை முட்டாள்களாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு கடந்த 4 ஆம் தேதி பதிவிடப்பட்டுள்ளது.