உலக இனங்களுக்கே எடுத்துக்காட்டாக விளங்கும் ஓர் தேசிய இன விடுதலைப் போரை அவமதிக்கும் வகையில் மத சக்தியை ஓர் இனத்தின் மீது அள்ளி வீசுவதை இம்ரான்கான் போன்றோர் இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ் பேரரசு கட்சி தலைவர் கவுதமன் எச்சரித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ‘பெரும்பான்மையான தற்கொலைத் தாக்குல்கள் இந்துக்களாக இருந்த விடுதலை புலிகளால் நடத்தப்பட்டது என்று பேசி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

எமது ஆயுதப் போரானது எந்தவொரு பயங்கரவாத சிந்தனைகளையும் அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்டதல்ல. எமது மக்களின் அரசியல் உரிமைகளை அடிப்படையாக கொண்டது என்பார், தமிழீழத் தேசிய தலைவர் பிரபாகரன். உலக இனங்களுக்கே எடுத்துக்காட்டாக விளங்கும் ஓர் தேசிய இன விடுதலைப் போரை அவமதிக்கும் வகையில் மத சக்தியை ஓர் இனத்தின் மீது அள்ளி வீசுவதை இம்ரான்கான் போன்றோர் இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

எமது மக்களைக் கொன்று குவித்தபோது இலங்கையோடு பாகிஸ்தானும் கைகோர்த்ததை நாங்கள் மறுந்துவிடவில்லை. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தவரும் புலிகளின் படையில் தமிழர் என்று ஒற்றை அடையாளமாக இயங்கினர். பிரபாகரன் தனது மூத்த மகனுக்கு சார்லஸ் ஆண்டனி என்று தனது உயிரான நண்பனின் பெயரை சூட்டி மத நல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி அவர் கட்டமைத்த விடுதலைப் புலிகள் இயக்கம் நடத்திய தற்கொலைத்தாக்குதலாக இருந்தாலும் சரி, போராக இருந்தாலும் சரி மரபு மீறியதில்லை. அறம் கொன்றதில்லை! இதுவரை ஒரு அப்பாவி சிங்கள மக்களைக் கூட கொன்றது கிடையாது. இப்படிப்பட்ட அறம் பாகிஸ்தான் அதிபருக்குத் தெரியுமா? எந்த நாட்டையும் ஆக்கிரமிக்க, தமிழீழ விடுதலைப் புலிகள் போராடவில்லை! தனக்கான தேசிய இன விடுதலைக்காக தமிழீழ லட்சியத்திற்காக மட்டுமே போராடினார்கள்.

ஆனால் இம்ரான் கான் இந்து பயங்கரவாதிகள், படுபயங்கரவாதிகள் என்று எந்த இன வரையறை புரிதலுமின்றி பேசியிருக்கிறார். மதவெறி சிந்தனையோடு கண் திறந்து பார்க்கும் அனைத்தையும் கற்பிதம் செய்யக்கூடாது என்பதை இம்ரான் கான் இனியாவது உணரவேண்டும் என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.