எதிரி நாடுகளின் படைகளைக் கண்டு அஞ்சும் பிரதமரை இதுவரை நாடு கண்டதில்லை என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி  விமர்சித்துள்ளார். 
இந்தியாவின் லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஒன்றரை மாதங்களாக முகாமிட்டு வந்தது சீனப் படையினர். எல்லையில் அத்துமீறி சீனா நடந்தபோதும், இந்தியா சீனப் படையினருடன் பேச்சுவார்த்தை நடத்தி பதற்றத்தைக் குறைக்க முயற்சி செய்தது. ஆனால், அதை மீறி இந்தியப் படையினர் மீது சீனப் படையினர் தாக்குதல் நடத்தியதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்  நிகழ்வு கரூரில் காந்தி சிலை முன்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மெழுகுவர்த்தி மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.


இந்த நிகழ்வில் பங்கேற்ற கரூர் எம்.பி. ஜோதிமணி பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். சீனாவுக்கு எதிராக களத்தில் நிற்கவேண்டிய இந்திய பிரதமர் தற்போது ஓடி ஒளிந்து கொள்கிறார். பிரதமர் எங்கே என தேடி கண்டுபிடித்து வெளியே கொண்டுவர வேண்டிய நிலையில் மோடி இருப்பது வேதனையாக உள்ளறது. இந்திய வரலாற்றில் இவ்வளவு பலவீனமான ஒரு பிரதமரை நாடு கண்டதில்லை.


இதுநாள் வரை இந்தியாவின் நட்பு நாடாக இருந்த நேபாளம், இந்திய பகுதிகளை நேபாளத்தின் பகுதிகள் எனச் சொல்லி அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அந்த அளவுக்கு மோசமான நிலைக்கு நாட்டை தள்ளி விட்டார் மோடி. எதிரி நாடுகளின் படைகளைக் கண்டு அஞ்சும் பிரதமரை நாடு கண்டதில்லை. இது தலைகுனிவு” என ஜோதிமணி  தெரிவித்துள்ளார்.