முன்னாள் அமைச்சரும் தற்போதைய திமுக மாவட்டச் செயலாளருமான செந்தில் பாலாஜியை நெஞ்சில் கை வைத்து டி.எஸ்.பி தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கரூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தம்பிதுரையும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.  தம்பிதுரைக்கு 11.00 - 12.00 மணி வரையும், ஜோதிமணிக்கு 12.00- 1.00 மணி வரையும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைக் கடந்தும் 12.30 வரை ஆட்சியர் அறையை விட்டு தம்பிதுரை வெளியே வரவில்லை எனக் கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த திமுக மாவட்டச்செயலாளர் செந்தில்பாலாஜி, தம்பிதுரையை வெளியேற்றுமாறும், தங்களுக்கு காலதாமதம் ஏற்படுவதாகவும் கூறினார். அவரை டிஎஸ்பி சுகுமார் சமாதானம் செய்தும் ஏற்காத செந்தில் பாலாஜி முன்னேறிச் செல்ல முற்பட்டார். அப்போது டிஎஸ்பி சுகுமார், செந்தில் பாலாஜியை நெஞ்சில் கை வைத்து தடுத்து நிறுத்தினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டிஎஸ்பிக்கும், செந்தில் பாலாஜிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

வேட்பாளர் ஜோதிமணியும் அவருடன் கடுமையாக வாதிட்டார். அந்த இடமே பெரும் பரபரப்பாக காணப்பட்டது. தம்பிதுரை வேட்புமனு தாக்கல் செய்த பின்பு புரோட்டகால் படி ஜோதிமணியிடம் தான் வேட்புமனு வாங்கியிருக்க வேண்டும். ஆனால், ஜோதிமணியை காக்க வைத்து தம்பிதுரைக்கு டம்மி வேட்பாளரிடம் வேட்புமனு பெறப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், நல்ல நேரம் முடியட்டும் என வேண்டும் என்றே காத்திருந்ததாக திமுகவினர் கூறுகின்றனர்.

முன்னாள் அமைச்சர் என்றும் பாராமல் செந்தில் பாலாஜியை நெஞ்சில் கை வைத்துத் தள்ளியதை அங்குள்ள ஒருவர் செல்போனில் படம் பிடித்து கசியவிட அது, திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.