மத்தியில் ஆளும் பாஜக அரசின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைவதை அடுத்து வரும் ஏபரல் , மே மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. மார்ச் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது.

இதையடுத்து காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக என  அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. அதிமுக சார்பில்  40 தொகுதிகளுக்கும் போட்டியிட விரும்புவர்களிடம் விருப்ப மனு வாங்கப்பட்டது. இதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைந்தது.

இந்நிலையில் கடைசி நாளான இன்று மொத்தம் 1,737 பேர் விருப்பமனு அளித்துள்ளனர். இதில்  கரூர்  நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் தந்தை சின்னதம்பி விருப்ப மனு அளித்துள்ளார். 

ஏற்கனவே அமைச்சர் ஜெயக்குமார் மகன், துணை முதலமைச்சர்  ஓபிஎஸ் மகன் ஆகியோரும் விருப்ப மனு அளித்துள்ளனர். இந்நிலையில் அமைச்சர் விஜய பாஸ்கரின் தந்தை மனு அளித்திருப்பது, அதுவும் கரூர் தொகுதிக்கு அளித்திருப்பது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் தொகுதி என்பது நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையின் தொகுதி.  இதையடுத்து அவர் வரும் தேர்தலில் அங்கு போட்டியிட முடிவு செய்துள்ளார். அதற்காக கடந்த சில மாதங்களாகவே தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம மேற்கொண்டிருக்கிறார். 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் விஜய பாஸ்கரின் தந்தை கரூர் தொகுதிக்கு விருப்ப மனு அளித்திருப்பது அதிமுகவினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தம்பிதுரை பாஜகவுக்கு எதிராக பேசி வருவதால் அதிமுக தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தம்பிதுரைக்கு எதிராகத்தான் தற்போது விஜய பாஸ்கரின் தந்தை  விருப்ப மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சர் விஜய பாஸ்கரின் தந்தை சென்ற ஆண்டு நடந்த வருமான வரித்துறை ரெய்டில் சிக்கி  விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.