தேர்தல் ஆணையம், கரூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகிய இருவரையும் இடமாற்றம் செய்து உத்தரவிட்டது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையமும் அடுத்தடுத்து குவியும் புகார்களை அடிப்படையாக கொண்டு மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி. ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. முதன் முறையாக கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாவட்ட எஸ்.பி. ஆகியோர் தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றப்பட்டனர்.

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் இருக்கும் காவல் நிலையங்களில், காவலர்களின் பெயர்களுடனேயே பண கவர்கள் கொடுக்கப்பட்டது தேர்தல் ஆணையம் நடத்திய சோதனையில் உறுதியானது. இதையடுத்து திருச்சி ஆட்சியர், துணை ஆட்சியர், எஸ்.பி ஆகியோர் கூண்டோடு மாற்றப்பட்டனர்.

இதேபோல் பல்வேறு மாவட்டங்களில் புகார் எழுந்ததை உன்னிப்பாக கவனித்து வந்த தேர்தல் ஆணையம், கரூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகிய இருவரையும் இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரை தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட ஆட்சியராக பிரசாந்த் வடநேரே காவல் கண்காணிப்பாளராக சசாங் சாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
