முன்னாள் அமைச்சர் கரூர் சின்னசாமி திமுகவிலிருந்து விலகி முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
முன்னாள் அமைச்சர் கரூர் சின்னசாமி திமுகவிலிருந்து விலகி முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
அதிமுக கரூர் மாவட்டச் செயலாளராகவும், அதிமுக மாநிலத் துணைப் பொதுச் செயலாளாராகவும் எம்ஜிஆர் அமைச்சரவையில் தமிழக தொழில்துறை அமைச்சராகவும் கரூர் ம.சின்னசாமி பணியாற்றியுள்ளார். 1999ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை கரூர் எம்.பி.யாக இருந்தார். அதிமுகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2010ம் ஆண்டு திமுகவில் இணைந்த இவர் மாநில விவசாய அணிச் செயலாளராக உள்ளார்.

இந்நிலையில், அமமுகவில் இருந்து வந்த செந்தில்பாலாஜிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்து வந்தார். மேலும், சட்டப்பேரவை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் சீட் கேட்டு, தீவிர முயற்சியில் இறங்கினார். ஆனால், அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. மொஞ்சனூர் இளங்கோ என்ற புதுமுகத்துக்கு சீட் கிடைத்தது. `சின்னசாமிக்கு சீட் கிடைக்காததற்கு காரணம் செந்தில் பாலாஜிதான் என பரவலாக பேசப்பட்டு வந்தது.

சமீபத்தில் ஸ்டாலினைக் கடுமையாக விமர்சித்த சின்னசாமி ஸ்டாலின் நல்லவர்தான். ஆனால் கருணாநிதி அளவிற்கு ஆளுமை கொண்டவர் இல்லை. அவரை அவரது குடும்பத்தினர் இயக்குகிறார்கள் என்றார். இவரது பேச்சு திமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில், கரூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கரூர் சின்னசாமி அதிமுகவில் இணைந்து ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். சமீபத்தில் முல்லைவேந்தன் அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
