சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், ``சாமி, சிங்கம் போன்ற படங்களை பார்த்துவிட்டு அதே போல் சில காவல்துறை அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள்.

அவர்களுக்கு உயர் அதிகாரிகள் அட்வைஸ் கொடுக்க வேண்டும். நான் சட்டமன்றத்திலேயே பேசியவன். உங்களுக்கு போதை ஏற்றினால் தான் கொலை செய்ய துணிச்சல் வரும். ஆனால் நாங்கள் தூங்கி எழுந்து பல் துலக்கும் நேரத்தில் கொலை செய்து விடுவோம் என்று பேசினார்.

மேலும் தமிழக முதலமைச்சரை மேடையில் விமர்சித்த அவர் குறிப்பிட்ட சமுதாயம் குறித்தும் சில விஷயங்களை பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு காவல்துறை வட்டாரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழக காவல்துறை கருணாஸ் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.கருணாஸின் இந்த பேச்சு தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது  சட்டத்தை மீறி யார் பேசினாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அதே நேரத்தில் கருணாஸ் தான் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனாலும் அவர் கைது செய்யப்படுவார் என கடந்த 2 நாட்களாக  தகவல் வெளிவந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை சாலி கிராமத்தில் உள்ள கருணாஸ் வீட்டுக்குச் சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து அங்கு பதற்றம் நிலவுவதால் நூற்றுக் கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக ஆளுநரிடம் கருணாசை கைது செய்வதற்கு அனுமதி வாங்கிய பின்னரே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக போலீசார் தகவல் கூறுகின்றனர். நுங்கப்பாக்கம் போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கொலை மிரட்டல் மற்றும் கொலை முயற்சி போன்ற பிரிவுகடிளல் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.