தமிழக அரசியல் சூழ்நிலைகளை உண்ணிப்பாக கவனித்து வருவதாகவும், உரிய நேரத்தில் உரிய முடிவெடுப்போம் எனவும் கூட்டணி எம்.எல்.ஏக்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். 

நீண்ட நாட்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்த அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு நேற்று சாத்தியமானது. ஆனால் இது டிடிவி தினகரன் அணியினருக்கு முதலில் பெரிய விஷயமாக தெரியவில்லை.
இதைதொடர்ந்து நேற்று தலைமை கழகம் வந்த பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமியுடன் கைக்குலுக்கி இணைப்பை உறுதி செய்தார். 

மேலும் பன்னீருக்கு துணை முதல்வர் பதவியும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். 
இதையடுத்து வைத்தியலிங்கம் எம்.பிக்கு துணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி வழங்கி அறிவிப்பு வெளியிட்டார். 

இதைதொடர்ந்து பேசிய வைத்தியலிங்கம், சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க விரைவில் பொதுக்குழு கூட்டப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். 

இந்நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடுப்பாகி எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளனர். எடப்பாடிக்கு எதிராக இதுவரை 19 எம்.எல்.ஏக்கள் புதுச்சேரி கிளம்பி ரிசார்ட்டுக்கு சென்றுள்ளனர். 

மேலும் கூட்டணி எம்.எல்.ஏக்கள் 3 பேரும் டிடிவி பக்கமே என தகவல் வெளியாகியது. இதைதொடர்ந்து கூட்டணி எம்.எல்.ஏக்களான தனியரசு, தமிமுன், கருணாஸ் ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், தமிழக அரசியல் சூழ்நிலைகளை உண்ணிப்பாக கவனித்து வருவதாகவும், உரிய நேரத்தில் உரிய முடிவெடுப்போம் எனவும் தெரிவித்துள்ளனர். 
மேலும், தற்போது டிடிவி பக்கமே உள்ளோம் எனவும், அவர்கள் தெரிவித்துள்ளனர்.