கடந்த 16 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் ,  முதலமைச்சரையும், காவல் துறையினரையும் அவதூறாக பேசியதாக 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

ஆனால் அவரை கைது செய்ய நீதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து கருணாசை ஏதாவது ஒரு வழக்கில் சிக்க வைப்பதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக  கூறப்படுகிறது.

ஆனாலும் கருணாஸ் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து விடுதலை ஆனார். அவர் வெளியே வந்த பிறகு தமிழக அரசையும், முதலமைச்சரையும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவலில் நடைபெற்ற, சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று மரியாதை செலுத்த வந்த போது தமிழ்நாடு தேவர் பேரவை அமைப்பினரோடு கருணாஸ் தரப்புக்கு மோதல் ஏற்பட்டது. அப்போது தேவர் பேரவைச் சேர்ந்த முத்தையா என்பவரது கார்  சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அந்தச் சம்பவம், தொடர்பாக புளியங்குடி காவல்நிலைத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கருணாஸை கைது செய்ய நெல்லை மாவட்ட போலீசார் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

இதையடுத்த இன்று அதிகாலை 5 மணிக்கு கருணாசின் சாலிகிராம வீட்டை சுற்றிவளைத்த போலீசார் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்தனர். ஆனால் கருணாஸ் அங்கு இல்லாததால் அவர்கள் வெளியேறினர். ஆனாலும் கருணா கைது செய்வது என்ற முடிவில் போலீசார் உறுதியான உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கருணாஸ் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யும் போலீஸ் நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காகவே கருணாஸ் மருத்துவமனையில் படுத்துக் கொண்டார் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் கருணாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் இன்று அவர் கையெழுத்துப் போட போலீஸ் ஸ்டேஷனுக்கு போகவில்லை.