புதிரின் மறுபக்கம்தான் ஜெயலலிதா, என்றால் ஜெயேந்திரரின் மறுபக்கத்தில் மர்மங்களும் உண்டு. ஆன்மீகத்தில் பெரியவா ஜெயேந்திரரும், அரசியலில் மகா பெரியவா ஜெயலலிதாவும் மோதிக்கொண்ட நாட்கள் தமிழகம் தகித்து தணிந்த தருணங்களே. 

காஞ்சி சங்கரமடத்தின் மேலாளராக இருந்த சங்கரராமன், கோயில் வளாகத்திலேயே 2004 செப்டம்பரில் கூலிப்படையினரால் வெட்டிக் கொல்லப்பட்டார். மடாதிபதிகளான ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் இருவர் தலைமையிலான மட நிர்வாகத்தின் திக்கற்ற போக்குகள் பற்றி புகார்களை கிளப்பியதாலேயே சங்கரராமன் சாகடிக்கப்பட்டதாக தகவல் பரவியது. இந்த கொலையில் ஆச்சாரியார்கள் இருவரின் தலையும் உருட்டப்பட்டது. 

அப்போது தமிழகத்தை ஜெயலலிதா ஆண்டு கொண்டிருந்தார். ‘இந்து பிராமண சமூகத்தில் பிறந்த ஜெயலலிதா நிச்சயம் காஞ்சி மடாதிபதிகளை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க மாட்டார்.’ என்று விமர்சனம் கிளம்பியது. 

ஆனால் அந்த எதிர்பார்ப்பை உடைத்தார் ஜெ., நவம்பர் 11, 2004ல் ஆந்திராவில் வைத்து ஜெயேந்திரரை கைது செய்தது காவல்துறை. அடுத்த சில மாதங்களில் விஜயேந்திரரும் கைது செய்யப்பட்டார். 

அடிப்படையில் ஜெயலலிதாவும் காஞ்சி மடத்தின் மடியான பக்தாள்தான். பெரியவரின் அருளாசிக்காக ஏங்கியவர். ஆனால் ஜெயேந்திரருடன், ஜெயலலிதாவுக்கு கருத்து முரண்பாடுகள் உண்டு. 

சங்கரராமன் கொலையில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்பட்டன. ஒன்று! இந்த கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான அப்பு, அப்போது எதிர்கட்சியாக இருந்த தி.மு.க.வின் முக்கிய தலைவரான ஆற்காடு வீராசாமிக்கு நெருக்கமான நபர். அப்பு வழியே தி.மு.க.வுடன் ஜெயேந்திரர் நெருக்கமாக இருப்பதாக ஜெயலலிதா சில விஷயங்களை உறுதி செய்தார் என்பார்கள். 

காரணம் 2! என்னதான் திராவிட கழகத்தின் ஒரு பிள்ளை என்றாலும் அ.தி.மு.க. இந்துத்வ ஆதரவு இயக்கமாகதான் சிறுபான்மையினர் நினைத்தனர்.

ஜெயலலிதா இந்து கோயில்களுக்கு செல்வது, யாகங்கள் நடத்துவது என்றிருந்ததால் அவரை தங்களுக்கு எதிர் நிலையில்தான் முஸ்லீம், கிறுத்துவ மற்றும் தலித் வாக்கு வங்கிகள் வைத்திருந்தன. இதை உடைத்து, தான் எல்லோருக்கும் பொதுவான தலைவி என்பதை காட்டிக் கொள்ளவே ஜெயேந்திரர் கைதை தில்லாக ஜெயலலிதா நிகழ்த்தினார் என்பார்கள். 
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதை கருணாநிதியே வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். 

ஆக ஜெயேந்திரரை ‘ஜெயிலே’ந்திரர் ஆக்கிய தில்லு பெருமை ஜெ.,வையே சேரும். இதன் மூலம் சிறுபான்மை வாக்கு வங்கியின் அன்பை அ.தி.மு.க. பெற்றதுதான். ஆனால் அதேவேளையில் பிராமணியம் தலைமையிலான இந்து வாக்கு வங்கி ஜெ.,வை இதற்கு பிறகு எதிர்த்தது என்பார்கள். ஆனால் எண்ணிக்கை அடிப்படையில் சிறுபான்மை மற்றும் தலித் வாக்கு வங்கி ஜெ.,வை குஷிப்படுத்தியது. 

கருணாநிதியே செய்ய தயங்க கூடிய இந்து மடாதிபதி கைதை ஜெயலலிதா நிகழ்த்தினார் என்று வரலாற்றில் அழுத்தமாக பதிவானது. 
அம்மான்னா சும்மாவாடா?!....