Karunanidhi was the one who influenced Indian politics by ramadoss
தமிழகத்தை கடந்து அகில இந்திய அரசியலிலும் திமுக தலைவர் கருணாநிதி தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என பாமக நிறுவனர் ராமதாஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் 94 வது பிறந்த நாளையொட்டி திமுக சார்பில் நாளை பிரம்பாண்டமான முறையில் வைரவிழா கொண்டாடப்படுகிறது.
இதில் 7 மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் திமுக தலைவர் கருன்னாநிதிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :
திமுக தலைவர் கலைஞரின் 94-ஆவது பிறந்தநாள் விழாவும், சட்டப்பேரவை வைரவிழாவும் நாளை கொண்டாடப்படுவதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியும், மனநிறைவும் அடைகிறேன்.
94 வது பிறந்த நாள் காணும் நண்பர் கலைஞருக்கு உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவிலும் மிக நீண்ட அரசியல் பயணம் கலைஞருடையது தான்.
திருவாரூர் மாடவீதிகளில் 14 வயதில் தொடங்கிய அவரது அரசியல் பயணம் ஈரோடு, காஞ்சிபுரம் வழியாக 80 ஆண்டுகளைக் கடந்து கோபாலபுரத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கருணாநிதிக்கும் எனக்கும் அரசியல்ரீதியாக ஆயிரம் கருத்து வேறுபாடுகள் உண்டு.
கருணாநிதி குறித்த எனது விமர்சனங்களை கண்டு அவர் ரசித்து இருக்கிறாரே தவிர, ஒருபோதும் வெறுத்தது கிடையாது.
அதேநேரத்தில் தமிழகத்திற்கு தேவையான சீர்திருத்தங்களை மேற்கொண்டதில் தந்தைப் பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் வழியில் கருணாநிதி செய்த பங்களிப்பை ஒருபோதும் நான் மறுத்ததில்லை.
பொதுவாழ்வில் 80 ஆண்டுகளைக் கடப்பதும், சட்டப்பேரவை உறுப்பினராக வைரவிழா காண்பதும் பெரும் பேறு.
தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவிலேயே மிக நீண்ட அரசியல் பயணம் கொண்டுள்ள கருணாநிதி, 4 தலைமுறை தலைவர்களுடன் அரசியல் செய்த பெருமைக்குரியவர்.
அப்பேறு நண்பர் கலைஞருக்கு கிடைத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. பொது வாழ்வில் நூற்றாண்டை கடந்தும் அவர் சேவையாற்ற வேண்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
