ராகுல் காந்தி கருணாநிதிக்கு உரிய மரியாதை தர மறுக்கிறார் என்ற விமர்சனங்கள் திமுகவில் பலமாக எழுந்துள்ள நிலையில் ராகுல் காந்தி விவகாரத்தில் மத்திய அரசு நடந்து கொண்ட விதத்தை திமுக தலைவர் கருணாநிதி கண்டித்து ராகுல் காந்திக்கு ஆதரவளித்துள்ளார்.

இது பற்றிய அவரது அறிக்கை:

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர், ராம் கிஷன் கிரேவால் தற்கொலை செய்து கொண்டார். அவர் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காகவும், தற்கொலைக்கு இரங்கல் தெரிவிக்கச் சென்றதற்காகவும் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாட்களில், மூன்று முறை கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ளார்.

 மேலும் மத்திய அமைச்சர் ஒருவர் இந்தப் போராட்டத்தை அரசியல் நாடகம் என்று வர்ணித்திருக்கிறார். இரங்கல் தெரிவிப்பதும்,போராட்டத்தை ஆதரிப்பதும் தனி மனித சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமையின்பாற்பட்டவை.

கைது செய்வதன் மூலம் அதைத் தடுக்க நினைப்பது மனித உரிமை மீறலாகும். ஒரே பதவி, ஒரே ஓய்வூதியத் திட்டம் என்பது அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலேயே அறிமுகப்படுத்தப்பட்டு, அனைவராலும் வரவேற்கப்பட்டு, ஆதரிக்கப்பட்டு வரும் திட்டம்.

 அந்த திட்டத்தை குறைகளை நீக்கி நிறைவாகவும் முழுமையாகவும் நடைமுறைப்படுத்துவது பற்றியும், மத்திய பா..ஜ.க அரசு உடனடியாக நல்ல முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.