மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்ய அனுமதி கோரிய வழக்கில், திறமையாக வாதாடி, வெற்றியை பெற்று கொடுத்திருக்கும் திமுக வழக்கறிஞர் வில்சனை, நீ வில்சன் அல்ல; வின்சன் எனக்கூறி பெருமைப்படுத்துவாராம் கருணாநிதி. கருணாநிதியின் வாக்கை பொய்யாக்காமல், கருணாநிதி மறைந்தபிறகும் அவருக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார் வழக்கறிஞர் வில்சன். 

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவரை மெரினாவில் அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்ய, திமுக சார்பில் முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. எனினும் நீதிமன்றத்தில் நிலுவைகளில் உள்ள வழக்குகள் மற்றும் சட்ட சிக்கல்களை காரணம் காட்டி மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி மறுத்த தமிழக அரசு, காந்தி மணிமண்டபத்தில் காமராஜர் நினைவிடம் அருகே இடம் ஒதுக்கியது. 

இதனால் திமுகவினர் அதிருப்தியடைந்தனர். கருணாநிதியை எப்படியாவது அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். அரசு கைவிரித்ததை அடுத்து, திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர். நேற்று இரவே இந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ரமேஷ் விசாரித்தார். பின்னர் தமிழக அரசின் விளக்கம் கேட்டு இன்று காலை 8 மணிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. 

இன்று காலை பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ரமேஷ் மற்றும் நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதத்திற்கு எல்லாம் பதிலடி கொடுத்து திறம்பட வாதாடினார் திமுக வழக்கறிஞர் வில்சன். இதுவரை முதல்வராக இருக்கும்போது இறந்தவர்கள் மட்டும்தான் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ராஜாஜி மற்றும் காமராஜர் ஆகியோர் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடத்தில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்ற அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதத்திற்கு வில்சன் பதிலடி கொடுத்தார். 

ராஜாஜி, காமராஜர் ஆகியோரின் சித்தாந்தங்கள் வேறு, திராவிட சித்தாந்தம் வேறு; எனவே கருணாநிதியின் சித்தாந்தத்தின் அடிப்படையில் மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும். மற்ற திராவிட தலைவர்களுக்கு மெரினாவில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், கருணாநிதிக்கு மட்டும் இடம் கிடையாதா? என வில்சன் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

மேலும் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்யாவிட்டால், அது நல்லடக்கமாக இருக்காது. 1988 அரசு உத்தரவுபடி ஏற்கனவே மெரினாவை மயானமாகவும், நினைவிடமாகவும் அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி. 13 முறை எம்எல்ஏவாக இருந்த கருணாநிதிக்கு, மெரினாவில் இடம் ஒதுக்காவிட்டால் தொண்டர்கள் உணர்வுகளை புண்படுத்தும். ஜெயலலிதாவை அடக்கம் செய்ய சிக்கல் இல்லாதபோது கருணாநிதியை அடக்கம் செய்யவும் சிக்கல் இல்லை என வில்சன் வாதிட்டார். 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம், கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது. 

திமுகவினர் அனைவரும் நேற்று மாலை முதல் பெரும் பதற்றத்துடன் இருந்தனர். கருணாநிதியின் உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்படுமா..? என்ற கேள்வி திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் மனதில் எழுந்திருந்தது. அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதே அவர்களின் பெரும் விருப்பமாக இருந்தது. ஆனால் அவர்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் தான். 

பல போராட்டங்களை முன்னெடுத்து வெற்றி கண்டுள்ள கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய, அவரது மறைவிற்கு பிறகு நீதிமன்றத்தில் போராடி வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார் வழக்கறிஞர் வில்சன். இந்த வழக்கறிஞர் வில்சன் வெற்றியாளர் என்று குறிப்பிடும் வகையில், நீ வில்சன் அல்ல; வின்சன் என கருணாநிதி பாராட்டி பெருமைப்படுத்துவாராம் கருணாநிதி. தன் மீது கருணாநிதி வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில், அவரது மறைவிற்கு பிறகு வெற்றியை பெற்று கொடுத்துள்ளார் வில்சன். மேலும் கருணாநிதியின் வாக்கை பொய்யாக்காமல், தான் வின்சன் தான் என்பதை நிரூபித்திருக்கிறார் வில்சன்.