“திமுகவில்தான் என் அரசியல் பயணத்தைத் தொடங்கினேன். அது எனக்கு வீடு.. என்னுடைய கோயில்... மறைந்த கலைஞர் என்னுடைய கடவுள்... தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே அவரைப் போன்ற உயர்ந்த தலைவரை பார்க்க முடியாது... அவர் தமிழகத்தின் பெருமை.. எனக்கு அவர் அப்பா போன்றவர்.. என ட்வீட் மேல் ட்வீட் செய்துகொண்டிருக்கிறார் நடிகையும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு.

இதற்குக் காரணம் இதுதான்...  குஷ்பு படத்துடன் ‘கருணாநிதி தமிழரா?’ என்ற அட்டைப் படத்துடன் தாங்கி வந்திருந்த ஒரு புலனாய்வு வார இதழில், தமிழர் இல்லாதோர் அரசியலுக்கு வரக் கூடாது என்று ரஜினியைக் குறி வைத்து சீமான் பேசுவதைப் பற்றி குஷ்புவிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு பதில் அளித்திருக்கும் குஷ்பு.. “கருணாநிதி தமிழர் கிடையாது. எம்ஜிஆர்  தமிழகத்தைச் சேர்ந்தவர் கிடையாது. ஜெயலலிதா கர்நாடகத்தில் இருந்து வந்தவர். அப்படி இருக்கும்போது இதைப் பற்றி பேசுவது தவறு. 

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம்.. ஜாதி, மதம். தமிழன் என்றேல்லாம் பார்க்க முடியாது. உலகின் மிகச் சிறந்த சூப்பர் ஸ்டார் ரஜினி எனச்சொல்லும் போது தமிழகத்தைதானே கை நீட்டிக் காட்டுகிறார்கள். அரசியல் ரீதியாக அவரை விமர்சிக்கலாம். ஆனால், அவர் தமிழர் இல்லை என்றெல்லாம் விமர்சனம் செய்வது தவறு’ என்று தெரிவித்திருக்கிறார். 

இதேபோல திமுகவை ஊழல் கட்சி என்று கூறிய கமலை, காங்கிரஸ் கூட்டணிக்கு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அழைத்திருக்கிறாரே என்ற கேள்விக்கு, “அழகிரி பேசியதில் தப்பு எதுவும் இல்லை.” என்றும் குஷ்பு பதிலளித்திருக்கிறார். இந்தப் பேட்டி வெளியானவுடனே குஷ்பு கொந்தளித்துவிட்டார். “தான் சொல்லாததை எழுதிவிட்டதாக” அந்த வார இதழை ட்விட்டரில் வசைப்பாடி வருகிறார். “திமுகவோடு எனக்கு பிரச்னையை ஏற்படுத்த வேண்டும் என முன்கூடியே திட்டமிட்டு பேட்டி எடுத்து பயன்படுத்தியிருப்பதாக” குஷ்பு ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். 

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பிளவை ஏற்படுத்த அந்த வார இதழ் திட்டமிட்டு வேலை செய்திருப்பதாக குஷ்பு தொடர்ச்சியாகக் கொந்தளித்து வருகிறார். குஷ்பு மட்டுமல்ல, காங்கிரஸ்காரர்களும் அந்தப் பேட்டி திமுக - காங்கிரஸ் கூட்டணியைப் பாதிக்கும் என மேலிடம் வரை போட்டுகொடுத்து வருகிறார்கள். இளங்கோவனின் ஆதரவாளர் என்ற முத்திரை குஷ்பு மீது உள்ளதால், அதை மற்ற கோஷ்டிகளும் பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கியுள்ளனர். 

குஷ்புவை காண்டாக்கிய அந்த வார இதழ் எது என்று கேட்கிறீர்களா? சில ஆண்டுகளுக்கு முன்பு ‘இன்னொரு மணியம்மை’ என்று கருணாநிதியையும் குஷ்புவையும் இணைத்து கட்டுரை எழுதிய வார இதழ்தான் அது.  “அதற்காக ஆயிரம் முறை அந்த இதழ் மன்னிப்பு  கேட்டதாலேயே இப்போது பேட்டிக்கு தான் ஒத்துக்கொண்டதாக”வும் ட்விட்டரில் குஷ்பு தெரிவித்திருக்கிறார்.