திமுக தலைவர் கருணாநிதிக்கு கல்லீரல் தொடர்பான பிரச்சனைக்காக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று காலை முதல் மீண்டும் அவருக்கு மஞ்சள் காமாலை வந்துள்ளதாக காவேரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுக தலைவர் கருணாநிதிக்கு கல்லீரல் தொடர்பான பிரச்சனைக்காக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று காலை முதல் மீண்டும் அவருக்கு மஞ்சள் காமாலை வந்துள்ளதாக காவேரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூலை 28ஆம் தேதி நள்ளிரவு கோபாலபுரம் இல்லத்தில் இருந்து ரத்த அழுத்தக் குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதிக்குத் தொடர் சிகிச்சை அளித்ததன் மூலம் அவரது ரத்த அழுத்தம் சீரான நிலைக்கு வந்ததாக அறிக்கை வெளியானது.

மீண்டும் ரத்த அழுத்தம் இயல்புக்கு வந்தாலும், வயது முதிர்வுக்கு உள்ள பிரச்சனையால் இருக்கும் கருணாநிதி இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர்கள் அறிக்கையில் கூறியிருந்தனர்.இதனையடுத்து, சளித் தொல்லை அதிகம் இருந்ததால், படுத்த படுக்கையில் இருந்து எழுந்து உட்கார வைத்ததாக சொல்லப்பட்டது.இப்படி தீவிர கண்காணிப்புக்கு இடையில் கல்லீரல் செயல்பாட்டில் பிரச்சினை ஏற்பட்டதை அறிந்த காவேரி டாக்டர்கள், சென்னை குளோபல் மருத்துவமனையில் கல்லீரல் நோய், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையத்தின் தலைவராக இருக்க்கும் டாக்டர் முகமது ரேலாவை வரவழைத்தனர். டாக்டர் ரேலா தற்போது கருணாநிதிக்கு கல்லீரல் தொடர்பான சிகிச்சை அளித்து வருகிறார்.

 இந்த நிலையில், இன்று காலை முதல் கருணாநிதியின் உடல் நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி டாக்டர்கள் வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளது. “சில நாட்கள் சீராக இருந்த ரத்த அழுத்தம் மீண்டும் குறைந்துகொண்டிருக்கிறது. அதோடு கல்லீரல் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டு மஞ்சள் காமாலையும் சேர்ந்து வந்திருக்கிறது. தற்போது உடல்நிலை சீராகி வந்த நிலையில் மஞ்சள் காமாலை வந்திருப்பது ஆபத்தானது. தொடர் கண்காணிப்பில் இருக்கும் கருணாநிதியின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்த நிலையில், மீண்டும் பின்னைடைவில் உள்ளதால் குடும்பத்தினர் மற்றும் திமுகவினரை கவலையில் உள்ளார்கள்.