21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுன் திமுக தலைவர் கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதியின் உடலுக்கு முப்படை வீரர்கள் மரியாதை செலுத்தினர். பின்பு கருணாநிதி உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு கருணாநிதி குடும்பத்தினர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் ராகுல்காந்தி, சந்திரபாபு நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால், நாராயணசாமி, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் மரியாதை செலுத்தினர். முன்னதாக கலைஞரின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. ராஜாஜி அரங்கத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சதுக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

இந்த ஊர்வலத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கண்ணீர் மல்க பங்கேற்றனர். மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இறுதி ஊர்வலம் அண்ணா சதுக்கத்தை அடைந்ததும், குடும்பத்தினர் மற்றும் தலைவர்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு, கலைஞரின் உடல் அண்ணா சமாதிக்கு பின்புறம் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் இயற்கை எய்தினார். இதனையடுத்து இன்று அதிகாலை முதல் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டது.

இதனையடுத்து அங்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் மற்றும் லட்சக்கணக்கான தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். பிறகு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு 21 குண்டுகள் முழங்க சென்னை மெரினாவில் உள்ள அண்ணா சமாதி பக்கத்தில் அவரதுஉடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.